Sing-Ind Voice

Breaking News

[w8_row margin_bottom=”30px”]
[w8_column type=”col-md-6″]« Unavu[/w8_column]
[w8_column type=”col-md-6″]A Celebration for the Chola King Rajendra Cholan in Singapore »[/w8_column][/w8_row]

Cambodia -Mr Pon Mahalingam, News Editor – September 23rd, 2014

கம்போடியா

“உலகின் ஆகப் பெரிய இந்துக் கோயில் இந்தியாவில் இல்லை.” இந்த ஒரு வரி, எல்லா இந்துக்களையுமே கொஞ்சம் ஆச்சர்யப்பட வைக்கும். திடுக்கிடக் கூடச் செய்யும். ஆனால் அதுதான் உண்மை. அது கம்போடியாவில் இருக்கிறது. சியெம் ரீப் என்னும் அழகான ஊருக்குள் இருக்கிறது அந்த ஆலயம். நாலாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில், ஒரு கோட்டோவியமாக அங்கோர் வாட் என்னும் அந்த ஆலயத்தின் அறிமுகம் கிடைத்ததாக நினைவு. அதைக் காண வேண்டுமென்ற ஆவல், நினைவு தெரிந்த நாளிலேயே தொடங்கிவிட்டது எனலாம். எனக்குக் கொஞ்சம் வரலாற்றுப் பைத்தியம் உண்டு. கோயில், சிற்பம், சிலை, அரும்பொருளகம் என்றால், ஐயாவுக்கு சோறு தண்ணி வேண்டாம்.

ஆகவே, எந்தத் திசையில் இருக்கிறது என்ற ஞானம் கூட இல்லாத வயதிலேயே அங்கோர் வாட் மீதான பிரேமை கனிந்து விட்டது. 1995-ல் சிங்கப்பூர் வந்ததும், அந்த ஆசை கிடுகிடுவென புது HDB வீட்டுக் கட்டுமானம் மாதிரி வளர ஆரம்பித்தது. “பக்கத்துலதான் மகாலிங்கம், மூணு நாள் போதும், 800-வெள்ளி எடுத்து வைச்சுக்க, போயிட்டுப் பார்த்துட்டு வந்துர்லாம்” என்று உள்ளூர் நண்பர்கள் அவ்வப்போது ஆசை காட்ட, அது காடாய் வளர்ந்தது.

நந்தனார், சிதம்பரம் போய் நடராஜர் தரிசனம் செய்ய, நாளைப் போவோம் நாளைப் போவாம் என்பாராம். அதனால் அவருக்கு திருநாளைப் போவார் என்றே ஒரு பெயருண்டு அல்லவா ? அதுமாதிரிதான் நானும். இப்ப போவோம், பிறகு போவோம் என்று நாளைக் கடத்திக் கொண்டே வந்தேன்.

என் நெருக்கமான நண்பர்களுக்கு இதுபற்றி நன்றாகவே தெரியும். அங்கோர் வாட் பற்றி நான் வருணித்த வருணிப்பில், என் நண்பர்கள் சிலரே அதைக் குடும்பத்தோடு சென்றுபார்த்துவிட்டு வந்து என்னிடம் வருணித்த அனுபவமும் எனக்கு உண்டு. போகலாம் என்று யோசிக்கும்போது ஏதாவது வந்துவிடும். அல்லது துணைக்கு ஆள் கிடைக்காது. புள்ளையும் குட்டியுமாய் அலைய என் பாகம்பிரியாளுக்கு ஒப்புதல் இல்லை. நீங்க வேணாப் போயிப் பார்த்துட்டுவந்து சொல்லுங்க. இப்போதைக்கு என்னை ஆளைவிடுங்க என்று சொல்லி விடுவார்.

இந்தக் கதையை நண்பர் பரணியிடம் ஒரு நாள் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே அவர். “அண்ணா, அடுத்த பள்ளி விடுமுறைக்குக் கிளம்புறோம். நான் வரத் தயார் ! நீங்க தயாரா ?” என்று கேட்டு என்னை உசுப்பேற்றினார். சரி. கிடைத்து வாய்ப்பு. வசமா ஒரு ஆளு சிக்கியிருக்கு என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம் ஒரு நாள் நண்பர் ராஜகோபால்(ராஜூ) வீட்டுக்குப் போயிருந்தபோது அவரிடமும் இதுபற்றிச் சொன்னேன். சோழர்கள் பற்றியும் அவர்கள் எடுப்பிச்ச கற்றளிகள் பற்றியும், புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் நடமாடும் கலைக் களஞ்சியமான குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், ராஜூவின் சொந்தச் சித்தப்பா. அந்த வகையில், ஒரு முறை சித்தப்பாவை சிங்கப்பூருக்கு வரவழைச்சு அப்படியே கம்போடியாவுக்கு அள்ளிக்கிட்டுப் போயிடுவோம் மகா என்று அவரும் எனக்குத் தூபம் போட்டார்.

ராஜூவின் சித்தி பையன் நவீன், என்னைப்போல் ஒரு வரலாற்றுப் பிரியர் என்றும் தெரியவந்தது. ஆனால், ஆசைப்படுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வப்போது ஒரு பையைத் தூக்கிக் கொண்டு, கம்போடியா, பாலி, போராபுதூர், பிரம்பனான் என்று கிளம்பிவிடும் செயல்வீரர். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். ஒரு பொது விடுமுறையோடு கூடிய வார இறுதியில் கிளம்பி விடுவோம் என்றார் ராஜூ. சரி. வேளை வந்துவிட்டது போலும் என்று நினைத்துக் கொண்டேன். அவரிடம் பேசி ஆசையை வளர்த்துக் கொண்டேன்.

இப்படியாகத்தான் ஒரு சுபயோக சுபதினத்தில், கம்போடியா புறப்படலாம் என்று முடிவானது. நோன்புப் பெருநாளை ஒட்டிய வார இறுதி தோதாக உள்ளது. போகவர ரெண்டு நாள் தவிர, அங்க மூணுநாள். ஓகேயா என்றார் ராஜூ. உடனே உம் கொட்டிவிட்டேன். அப்புறம் நடந்ததெல்லாம் வேகம் வேகம் வேகம்தான்.

சியெம் ரீப்புக்கு நேரடி விமானம் குறைச்சல்தான். துட்டும் கொஞ்சம் கூட… ஆனால், புனோம் பென்னுக்கு அப்படியில்லை. சியெம் ரீப்புக்கு சில்க்ஏர் நேரடியாகப் போகிறது. ஆனால், இருவழி விமானச் சீட்டு வெறும் 620 வெள்ளிதான் பிரதர் என்றார் ராஜூ. வாலட் இருந்த ஜூன்ஸ் பாக்கெட் பொசுங்கும் வாடை வந்தது. சியெம் ரீப்புக்கு எம்புட்டு தோழரே என்று கேட்டுக் கொண்டு இணையத்தில் தேடத் தொடங்கின விரல்கள்.. அடடே.. பேஷ் பேஷ்.. ரொம்ப சகாயமா இருக்கே என்று நினைப்பதற்குள், பாஸ்போர்ட் முதல் பக்கத்தை வாட்ஸ்அப் பண்ணுங்க அப்பு என்று ராஜூ கூறி(வி)னார். நவீன் மூலம் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டு மறுநாள் மத்தியானம் மூவருக்கும் டிக்கெட் தயார். மூணு பேருக்கும் போக வர 750 வெள்ளிதான். வாழ்க டைகர் ஏர்வேஸ்

!
பேருந்தில் அமர்ந்தவாறு டிக்கெட்டில் என் பெயரைப் பார்த்ததும், கண்ணில் ஆனந்தபாஷ்பம் துளிர்க்க, உடனே பரணியை அழைத்தேன். தம்பி, இப்படிக்கா இப்படி.. பய புள்ளைக உடனே டிக்கெட்டை எடுத்துப்புட்டாய்ங்க. அங்க எப்படின்னு கேட்டேன். அவரு அலுவலகத்துல லீவு சொல்லிட்டு அப்புறமா டிக்கெட் போட்டுர்றேன்னுட்டு போனை வைச்சுட்டாரு. அடுத்தநாள் ராஜூவின் மற்றொரு நண்பர் மகாதேவன், தலைவா நானும் வர்றேன் போலாம் என்று இணைந்து கொள்ள, இப்போது எண்ணிக்கை மூன்றிலிருந்து நாலானது. நான்கு பிரம்மச்சாரிகள் சேர்ந்ததும், பரணி வீட்டுக்காரம்மா ஜகா வாங்கிவிட்டார். நீங்க நல்லாப் போயிட்டு வாங்க. இந்தக் கூட்டத்துல என்னாலயும் பிள்ளைகளாலயும் முடியாது சாமின்னு சொல்லி, நல்ல மனசோடு வீட்டுக்காரரை நாலுநாள் தனியாகச் சென்று வர அனுமதித்து விட்டார். பரணி நின்னொடு இப்போது ஐவரானோம் என்று நினைத்துக் கொண்டேன். அவரும் அடுத்தநாளே டிக்கெட் போட்டார்.

நேரே புனோம்பென் போய், அங்கிருந்து ஒரு வேனில், ஐந்து மணி நேரம் பயணம் செய்து, சியெம் ரீப்பைச் சென்றடைவது என்று ஏற்பாடானது. பதினைந்து நாட்களுக்கு முன்னரே டிக்கெட் போட்டு விட்டதால், நாளொற்றித் தேய்ந்தன விரல்கள். ஒருவழியாக அந்த நாளும் வந்தது. ராஜூ வீட்டிலிருந்து நால்வர் புறப்பட்டோம். பரணி நேரே விமான நிலையத்துக்கு வந்துவிட்டார். ஜமா சேர்ந்ததுமே, உற்சாகம் ஊற்றெடுக்கத் தொடங்கி விட்டது. ஐவருக்கும் கைப்பெட்டிதான். சரக்குப் பெட்டி ஏதுமில்லை. பயணிகள் முகப்பில் சென்று பதிந்து, இருக்கை உறுதிச் சீட்டு வாங்கிக் கொண்டு ஆனந்தபவனில் மதிய உணவை முடித்தோம். அங்கேயே ரெண்டு மூணு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிந்து உலகுக்கு எங்கள் பயணத்தைப் பறைசாற்றினோம்.

ரெண்டே மணி நேரம்தான். எடுத்தது கண்டனர். இற்றது கேட்டனர் என்று கம்பன் பாடியது போல, ஏறினோம், இறங்கிவிட்டோம். பிற்பகல் ஒன்றே காலுக்குப் புறப்பட்டு மூன்று மணிக்கு இறங்கிவிட்டோம். மேலே இருந்து பார்க்கும்போதே கம்போடியா பச்சைப் பசேல் என்று மரகதப் போர்வை போல இருந்தது. பகல் பயணத்துக்குக்கிடைத்த பரிசு அது.

எங்கு பார்த்தாலும் பாம்புபோல் ஆறுகள் ஓடின. வெயிலில், ஆற்றின் நீர்ப்பரப்பு ஜொலித்தது. நல்ல மழை பெய்து, விமான நிலையம் துடைத்து வைத்தது போலிருந்தது. எங்களோடு விமானத்தில் வந்தது, கிட்டத்தட்ட எல்லாருமே சுற்றுலாப் பயணிகள்தான். முகத்திலேயே அந்தக் களை தெரிந்தது. எங்கள் குழுவில் இருவர் சிங்கப்பூரர்கள். ஆகவே அவர்களுக்கு விசா தேவையில்லை. சும்மா ஒரு ச்சாப். அம்புட்டுத்தான். மற்ற மூவருக்கும் 20 அமெரிக்க டாலர் கொடுத்து விசா பெற்று வெளிவந்தோம். (20 டாலர் மீது கம்போடிய அரசுக்கு என்ன மோகமோ தெரியவில்லை. எல்லா இடங்களிலும், வெளிநாட்டவர் அனுமதிக்கு 20 டாலர் கட்டணம்தான். தாஜ்மகாலுக்குக் கூட இந்தியாவில், வெளிநாட்டவருக்கு, பத்து டாலர்தான் கட்டணம்..)

இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு, விமான நிலையத்திலேயே விசா கொடுக்கிறார்கள். புண்ணியமாகப் போயிற்று. இல்லாவிட்டால், இதற்குவேறு இரண்டு நாட்கள் அலைய வேண்டும்.
ராஜூ, மகாதேவன், நவீன், பரணி, மகா என்று ஐவர் குழாம் அட்டகாசமாக புனோம் பென் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தது. எங்களுக்காக உள்ளூர் சாரதி ரா காத்திருந்தார். ஆமாங்க, முழுப் பெயரே ரா மட்டும்தான். நாங்க சுருக்கலை. அவரைப் போல், ஆங்கிலம் பேசத் தெரிந்த வாகன ஓட்டுநர்கள் கம்போடியாவில் அரிது. வழிகாட்டிகளும் ஆங்கிலத்தில் கிடைப்பது சற்று சிரமம்.

ஆனால், சியெம் ரீப்பில் அதிகமானோருக்கு அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருக்கிறது. தலைநகர் புனோம் பென்னும், சியெம் ரீப்பும்தான் கம்போடியாவின் அந்நியச் செலாவணியின் மிக முக்கிய ஆதாரங்கள். ஆகவே இரண்டு நகரங்களும் மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு வரை உள்நாட்டுப் போரில் சின்னாபின்னமாகிக் கிடந்த நாடு என்பதற்கான எந்தத் தடயமும் இந்த இரண்டு ஊர்களில் இல்லை.

பொன்னிற மாலை ஒளியில், புனோம் பென் தகதகவென ஜொலித்தது. கிட்டத்தட்ட சென்னை போலத்தான் இருந்தது. ஆனால், சுத்தமாக இருந்தது சாலை. இந்த நாட்டில், வலப்புற வாகனமோட்டும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அது தொடக்கத்தில் வித்தியாசமாக இருந்தது. இரண்டு நாளில் பழகி விட்டது. ஒரு கடையில் நுழைந்து பயணத்துக்குத் தேவையான நொறுக்குத் தீனிப் பொட்டலங்கள், தண்ணீர், குளிர்பானம் வாங்கிக் கொண்டோம்.

புனோம் பென்னிலிருந்து சாதாரணமாக சியெம் ரீப் செல்ல, ஐந்து மணி நேரம் போதும். ஆனால், நாங்கள் போயிருந்தபோது, சாலை செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தது. உலக வங்கி உதவியோடு சாலை அகலப்படுத்தப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால், ஒன்பது மணி நேரத்துக்கு மேல் பயணம். முதுகு ஒடிந்து விட்டது. இந்தப் பயணத்தின் ஒரே வில்லன் இந்தப் பயணம்தான். பாதிவரை சாலை பரவாயில்லை. அப்புறம் நாலு மணி நேரம் நரகம்தான். முதலிலேயே ஓட்டுநர் இதுபற்றிச் சொல்லி இலவச உடல் பிடிப்புக்குத் தயாராகிக் கொள்ளுங்கள் என்று எச்சரித்து விட்டார்.

புனோம் பென் நகருக்குள் மிகப் பெரிய மீகோங் நதி ஓடுகிறது. மழைக் காலத்தில் அந்த நதியில் போகும் விரைவுப் படகிலேயே சியெம் ரீப் போக முடியுமாம். ஆனந்தமான பயணமாக இருக்க வேண்டும் அது. எங்களுக்கு அது லபிக்கவில்லை. ஒரு சுற்று வந்தோம் ஊரை. போகும் வழியில்தான் அரண்மனை வளாகம். அண்மையில்தான் அதைத் தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன்.

கம்போடிய மன்னர் இறந்து அவருடைய அஸ்தியை, வெள்ளி மாடத்தில் வைக்கும் சடங்குக்காக, அந்த இடத்தில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதை, ஊர்வலம் எல்லாம் நினைவுக்கு வந்தது. நான்தான் அந்தச் செய்தியைச் செய்தேன். இவ்வளவு விரைவில் அந்த இடத்தை நேரில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லைதான். மீகோங் நதியை நேரில் பார்த்தது பரவசமாக இருந்தது. ஓரிடத்தில் கூட நதியில் பிளாஸ்டிக் பையைப் பார்க்கவில்லை. சுத்தமாக இருந்தது. எங்கும் சாக்கடை கலக்கவில்லை.

இப்படித்தானே இருந்திருக்க வேண்டும் நம்ம சென்னைக் கூவமும். ஒரு நகருக்குள் நதி வருவது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம். அதைப் பேணிப் பாதுகாக்கும் கம்போடியர்களைப் பாராட்ட வேண்டும். மாலை ஐந்து மணிக்கு மேல், நகர் நீங்கு படலம் தொடங்கியது. சின்னச் சின்ன வேன்களுக்குள் ஆட்களை நெருக்கமாக நிற்க வைத்து, அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். பொதுப் பேருந்து வசதி இருப்பது போல் தெரியவில்லை. எல்லாமே தனியார் வாகனங்கள்தான். மக்கள் முகத்தில் ஒரு அறியாமையும் அந்நியோன்னியமும் தெரிந்தது.

நம்மைக் கண்ணுக்குக் கண் பார்த்து சிரிக்கிறார்கள். பெண்கள் பெரிதாக வெட்கப்படுவதுபோல் தெரியவில்லை. சிநேகமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், வறுமை முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது. புனோம் பென்னை விட்டு அகன்றதும், வீடுகள் மறையத் தொடங்கின. ஒரே அத்துவானமாக இருந்தது. சாலை விளக்குகள் இல்லை. எப்போதாவது ஒரு பெரிய கண்டெயினர் லாரி கடந்து போகும். பயணிகள் பேருந்துகள் எல்லாமே பாதுகாப்புக் காரணங்களுக்காகக் காலையிலேயே சியெம் ரீப்புக்குப் புறப்பட்டு விடுமாம். இருவழிகளிலுமே, மாலையில் பேருந்துச் சேவை கிடையாது.

விமானத்தில் வந்த களைப்புத் தீர எல்லாருமே சற்று நேரம் கண்ணயர்ந்து விட்டோம். பின்னர் ஜமா களைகட்டத் தொடங்கியது. பரணியின் சொந்தப் பாடல் தொகுப்பு ஒலிக்கத் தொடங்கியதும், வேனுக்குள் உற்சாக அலை ஓடியது. பரணி தேர்ந்த இசைப்ரியர் என்பது எனக்குத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு பாடல் ஓய்ந்து, அடுத்தபாடல் தொடங்கியதும், ஆஹாகாரம் எழும். எல்லாமே இளையராஜா பாடல்கள்.. கேட்க வேண்டுமா ?

ராஜூ தன்னிலை மறந்து விட்டார். எனக்கு இப்பவே இது ஒரு காப்பி போட்டுக் கொடுங்க பரணி என்று ஆர்டர் கொடுத்து விட்டார். ஒவ்வொரு பாடலும் அவரவர் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்க வேண்டும். சாலையின் இருமருங்கும் இருள் கப்பியிருந்தது. அந்த அந்தகாரம், பாடல்களுக்கு போதையேற்றியது. கிட்டத்தட்ட நவீனையும் ஓட்டுநரையும் தவிர, நாங்கள் நால்வருமே, பாடல்களை வாய்விட்டுப் பாடினோம். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்த பாடல் வரிகூட மெல்ல மெல்ல நினைவின் ஆழத்திலிருந்து எழுந்து வந்தது.

ஆனந்தக்கும்மியில் வரும் ஓ வெண்ணிலாவே பாடல் வரி அட்சர சுத்தமாய் நினைவின் ஆழத்திலிருந்து எழுந்து வந்தது. அடேயப்பா.. மனித மூளைதான் எவ்வளவு பெரிய அதிசயம். நாம் விரும்பிய பாடலை, உயிருள்ளவரை நம்மால் மறக்க முடியாது போலும். ஒன்றன்பின் ஒன்றாகப் பாடல்கள் வழிந்து, பயணத்தை ரம்மியமாக்கின. இது ஒரு அற்புதக்கணம். இதுபோல் இனி அமைய நெடுநாட்களாகும் என்ற எண்ணம் எல்லாருக்குமே வந்திருக்க வேண்டும். சட்டென எல்லா மன இறுக்கமும் தளர்ந்து விட்டு விடுதலையான உணர்வு..

பரணியோடு திடீரென மற்ற மூவரும் நெருக்கமானதுபோல் எனக்கு ஓர் உணர்வு. சில மணி நேரத்துக்கு முன்னர்தான் அறிமுகமானோம் என்ற எண்ணமே இல்லாத அளவுக்கு, ஒரு சகஜம் வந்துவிட்டிருந்தது அதற்குள்.. ஒருவரையொருவர் சிலேடையாகக் கிண்டல் செய்வதும், பாராட்டுவதும் அதை உறுதி செய்தது.

பயணங்கள் எவ்வளவு மகத்தானவை என்பதை மீண்டும் நான் உறுதி செய்து கொண்டேன். போகும் வழியில் எங்கே அடுத்த ஊர் வருகிறது என்றே தெரியவில்லை. ஆங்காங்கே ஒரு டியூப்லைட் வைத்துக் கீழே வலை மாதிரி ஏதோ விரிக்கப்பட்டிருந்ததை வழி நெடுகக் கண்டோம். என்னவென்று விசாரித்தபோது, எல்லாம் ஈசல் பிடிக்கும் வலைகள் என்று தெரியவந்தது.

ஒரு பெரிய ஊர் வரும் அங்கே இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்றார் ஓட்டுநர். ஆனால், அங்கு செல்லும்போது மணி பதினொன்றைத் தாண்டி விட்டதால் கடை மூடிவிட்டது. அருகிலிருந்த கடைகளில் பழமும் உருளைக் கிழங்கு வறுவலும் வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் நிறுத்தி நிறுத்தி, காற்றாட, இயற்கை உபாதையைத் தணித்துக் கொண்டோம். 1980-களில், தஞ்சை மாவட்டம் இப்படித்தான்இருக்கும். எங்கு பார்த்தாலும் தண்ணீர். பசுமை. சிள்வண்டின் சுகமான ரீங்காரம். பழைய நினைவுகள் கிளர்ந்து எழுந்தன அனைவருக்கும். அவரவர் அனுபவம் பகிரப்பட்டுக் கொண்டே வந்தது.

ராஜூவின் ஐஃபோன், நாங்கள் இருக்கும் இடத்தை ஒளிர்ந்து ஒளிர்ந்து காட்டியது. திசையைப் பார்த்துச் சொல்வார். இன்னும் இவ்வளவு நேரம்இருக்கு என்று. பின்னிரவு 2 மணியளவில் சியெம் ரீப் வந்து சேர்ந்தோம். அந்த நேரத்தில் அங்கு அவ்வளவு ஆரவாரத்தை எதிர்பார்க்கவில்லை. இரவுக் கேளிக்கைக் கூடங்களில் இசை பீறிட்டுக் கொண்டிருந்தது. ஒரு பழைமையான ஆலயம் உள்ள ஊரில், அந்த இசையும், கொண்டாட்டமும் பொருத்தமாக இல்லை. அனைத்துலகப் பயணிகளை வரவேற்று உபசரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கைகள். காலத்தின் கட்டாயம். ஒன்றும் சொல்வதற்கில்லை.

இரவு உணவுக்குச் சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். ஓட்டுநர் எங்களை விடுதியில் விட்டுவிடுவதாகச் சொன்னார். உணவு தயாராக அரை மணி நேரம் பிடிக்கும். அருகில்தான் விடுதி என்பதால் முதலில் அங்கே போகலாம் என்றார். அதுவும் சரிதான் என்று போய் கால் கை கழுவி ஓய்வெடுத்தோம். ஓட்டுநரே சற்று நேரத்தில் உணவை வாங்கி வந்துவிட்டார். அற்புதமான உணவு. ஐந்து அமெரிக்க டாலருக்கு, ஒரு நுரைப்பஞ்சுப் பெட்டியில், நிறையக் காய்கறியோடு கூடிய சுத்தமான அரிசிச் சோறு. பசிக்கு ருசியாக இருந்தது. காய்கறிகளில் கஞ்சத்தனம் காட்டவில்லை கடைக்காரர்கள். பலவிதமான காய்கறிகள், அழகியல் உணர்வோடு நறுக்கி அரை வேக்காட்டில் இருந்தன.

உணவு உள்ளே போனதும், தூக்கம்வந்தது. காலையில் எழும்போது எழுவோம் என்று படுத்துவிட்டோம். அதிகாலையில் எழுந்து அங்கோர் வாட்டை உதயவேளையில் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். ஆனால், 3 மணிக்குப் படுத்து 5 மணிக்கு அங்கே போக முடியாது என்பதால், இன்று அங்கு வேண்டாம் என்று முடிவானது. காலையில் சீக்கிரம் எழ வேண்டாம் என்ற இன்ப நினைவோடு தூங்கிப் போனோம்.. ( தொடரும்…)

Leave a Reply