Sing-Ind Voice

Breaking News

ஓம் சாயீராம்    

சாயீ ஸ்ரீ பாணிபாபா பீடம், கம்பனூர், நாச்சியாபுரம்                                         

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து மானகிரி மார்க்கமாக திருப்பத்தூர் செல்லும் வழியில் 12கிமீ தொலைவில் உள்ளது மருத்துவர் முத்தையா அவர்களின் சொந்த ஊரான நாச்சியாபுரம்.

நாச்சியாபுரம் கம்பனூரில் அமைந்துள்ளது சீரடி சாயீ பாணிபாபா கோவில்.  இவ்வூர் பிள்ளையார்பட்டியில் இருந்து 4கிமீ தொலைவில் இருப்பதால் இங்கு வரும் பக்தர்களும்  பாபாவைத் தரிசிக்க அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

25 வருடங்களுக்கு முன்பு வரை சாயிநாதரை பற்றி அதிகம் அறிந்திராதவர் மருத்துவர். அந்நிலையில் இவரின்  பெண்நோயாளி ஒருவருக்கு மார்பகபுற்று நோய் இருப்பதை மிகுந்த தயக்கத்துடன் விளக்கி சொன்ன போது அதனால் என்ன எல்லாவற்றையும் ‘பாபா’ பார்த்துக் கொள்வார் என்று வெகு இயல்பாக அந்தப் பெண்மணி கூறினார். உற்ற நோய் தீர்க்கும் மருத்துவர்ககு நோயுற்றவர் மூலமே அறிய வைத்த அன்பருளாளன். அந்தப் பெண்மணியின் பக்தியை வியந்த மருத்துவரும் பாபாவின்பால் ஈடுபாடனார்.  அப்போது அந்தப் பெண்மணியின்  மாமனார் அளித்த சாயிபாபாவின் சத்சரிதம் நூலை வாசிக்கத் தொடங்கினார். பக்தர்கள் பலரின் மூலம் சாயிநாதனின் அருட்பெருமைகள் தெரியவரத் தொடங்கியது. அச்சமயம் சிநேகிதர் ஒருவரை சீரடிக்கு சென்று வருவோமா என்று  மருத்துவ அழைக்க  நண்பரும் சரியென்று சொல்ல இருவரும் கிளம்பினர். முதலில் பூனாவிற்கு  இரயிலில் பயணம் மேற்கொண்டு அங்கே இருந்து பேருந்தில் சீரடியை சென்று சேர்ந்து மெய்மறக்க மனம் லயி்க்க சீரடி வாசனின் தரிசனமும் கிடைக்கப் பெற்றது.

முதல்முறையாக இரண்டரையடி உயரமுள்ள பாபா சிலையை வாங்கிக் கொண்டு திரும்புகையில் பயணிகள் கூட்டம் நிறைய இருந்ததால் பேருந்து கிடைக்காது சிரமப்பட சாயீயை வேண்டி நினைக்க , ஏசி  பேருந்தில் தானாக இடங்கள் கிடைத்து செளகரியமாக சென்னை வந்து சேரமுடிந்தது. வாங்கி வந்த பாபாவை க்ளினிக்கில் வைத்து வணங்கி வர, சாயின் மேலான பக்தி பெருகி  மாறாப் பற்றாக மாறி ஆலயம் எழுப்பிட எண்ணமுமானார் மருத்துவர்.  எண்ணத்தின் காரணம், சாயிதேவன் வைத்தியத்தில் உணர்த்தி அற்புதம் நிகழ்த்தி அருளியதே. தான் பிறந்த ஊரிலேயே கோவில் கட்டுவது எனத் தீர்மானித்தார்.

மருத்துவரின் மூத்த சகோதரரும் சாயிபாபா பக்தரே. அவரை பாபாதாசர் நாகப்பன் என்பார்கள்.  நாச்சியாபுரத்தில் இவர்களுக்கு ஊருக்குள்ளே ஒரு இடமும், மற்றையது ஊருக்கு வெளியேயும் இருந்தன. ஊருக்கு வெளியே உள்ள இடத்தை நீ எடுத்துக்கொள் என்று அண்ணன் நாகப்பன் சொல்லிவிட, மருத்துவரும் ஊருக்கு வெளியில் உள்ள இடத்தில் கோவில் கட்ட ஆயத்தமானார்.  போக்குவரத்து வசதியில்லாத இச்சிற்றூரில் மக்கள் எங்ஙனம் வந்து செல்வார்கள் என்ற தயக்கம் சகோதரர் பாபாதாசருக்கு இருந்தாலும், பாபா பார்த்துக் கொள்வார் என்ற மருத்துவரின் உறுதி கண்டு சரியென்றார்.  திறந்தவெளி நின்று காக்கும் கருப்பர், திருச்சி  உறையூர் வெக்காளி போல், நாச்சியாபுரத்திலே ஊருக்கு வெளியிலுள்ள தமது இடத்தில் சாயீயை  வெட்டவெளியில் வைக்கும் முடிவிலிருந்தார் மருத்துவர்.  ஆனால் அவரின் துணைவியார் பாபாவை வெட்டவெளியில் எல்லாம் வைக்கக்கூடாது பத்துக்குப் பத்து அறையிலாவது வைக்கவேண்டும் என்றார்கள்.  அதனால் மருத்துவர் சிறிய அளவில் கோவில் கட்ட முடிவெடுத்தார். அவ்விதம் அறை எழுப்ப தீர்மானித்து, பொறியாளர்களுடன் இடத்தினை பார்வையிட சென்று, சாயீயை எவ்விடம் வைப்பது என்பது பற்றி முடிவு செய்து அவ்விடத்தில் நண்பரை நிற்க வைத்து பார்க்கையில்,

மணற்சூறாவளி போல இதுவரை கண்டிராத ஒரு பெருங்காற்று  மணலைத் திரட்டி சுழன்று அடித்தது. பார்த்த இவர்களுக்கு பெரும் வியப்பு.  இச்சுழல்காற்று தான் நிலைக்கப் போவதற்கான பாபாவின் சமிக்ஞையாக உணர்த்தப்பட்டது என்ற எண்ணம் ஸ்திரமானது. கோவில் கட்டத் துவங்குமுன்  மருத்துவர் தம் குடும்பத்துடன் சீரடிக்கு சென்றிருக்கையில், இவரின் மகன், கோவிலை கட்டும்போதே நன்றாக பெரிதாக கட்டலாம் எனச் சொல்ல அவ்விதமே கோவில் பெரியதாகவும் சிறந்த அமைப்புடனும் கட்டப்பட்டது.  மருத்துவர் கோவில் கட்டத் தொடங்கி வேலைகள் நடந்தபோதில், அவரது மனைவி மருத்துவர் திருமதி விசாலாட்சி அவர்கள் தனது நகைகளை தந்து  உதவியதை நினைவு கூருகிறார்.

 வானம் பார்த்த பூமியில் கோவில் கட்டத் தொடங்கிய போது வேண்டிக் கொண்டு இராசாத்திக் கிணறும் எடுக்கப்பட்டது. கோவில் கட்டியதிலிருந்து சுற்றியுள்ள கிராமங்களில் எப்பொழுதும் தண்ணீர் தட்டுபாடில்லாது இருப்பது பாபாவின் அருள் என்கிறார்கள். இக்கோவில் பாணிபாபா கோவில் என்றே அழைக்கப்படுகிறது. வடஇந்தியாவில் பாணி என்பது தண்ணீரைக் குறிக்கும் சொல்லாகும்.  இக்கோவிலில் பக்தர்களே பாபாவிற்கு நீரால் அபிசேகம் செய்யுமாறு  மற்றோர் பாபா சிலையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. 

சகல சக்தியுடைய சாயீ பேரருள் புரிந்ததின் பலனே சிற்றூரான நாச்சியாபுரத்தில் இத்திருக்கோவில் உருவாகியது. நாச்சியாபுரத்தில் குடிகொண்டுள்ள பாபா பற்பல உன்னதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

பாணிபாபா திருக்கோவிலின் கன்னிமூலையில் அமர்ந்து முழு முதற்கடவுள் ஸ்ரீ மாணிக்க விநாயகர் அருள்பாலிக்கிறார். 

வீதியில் இருந்து உள்ளே நுழைந்தவுடன் கம்பீரமாக எதிர்ப்படுபவர் ஏழடி உயரத்தில் நின்றகோல அன்னபாபா. அன்னபாபாவும் இங்கிருந்து மக்களின் பசிப்பிணியைத் தீர்த்தருளுகிறார்
கோவிலின் வருசாபிசேகம் முடிந்த சிலமாதங்களில் தூங்காமல் தூங்கி மக்களுக்கு அருள்பாலிக்க [சயனக் கோலத்தில்] உபுண்டு பாபா ஊஞ்சலில் வைக்கப்பட்டார். உபுண்டு பாபாவும் மிக தத்ரூபமாக காட்சி தருகிறார்

மனதை மயக்கிடும் கண்ணுக்கினிய தவழும் கிருஷ்ணனின் விக்கிரக சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பிள்ளைப்பேறு வேண்டுவோர் அக்கிருஷ்ணரை பல்லக்கில் ஏந்தி கோவிலை வலம் வந்து ஆராதிக்கின்றனர்.

கூர்மமெனும் மகாவிஷ்ணுவின் அவதாரமான நற்சகுன ஆமை உருவச்சிலையும் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது.  மாங்காடு காமாட்சி அம்மனின் சக்கரபீடம் ஆமையின் முதுகாகும்.  ஐயப்பன் கோவில் விளக்குகளின் அடிவாரமாய் இருப்பதும் ஆமையே. பாபாவைப் போலவே ஆமையும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தன் எண்ணங்களாலேயே குட்டிகளைக் காத்திடும்.  கடலில் பயணிப்பவர்களை தாய் போலிருந்து காக்கும்.  யாருக்கும் தீங்கு நினையா புனிதஉயிரி.  ஆமையை கடல் பைரவர் என்றும் சொல்வர். தளர்வில்லா நம்பிக்கை மாற்றமில்லா பொறுமை உடையதும், குறள் உவமையாம் ஒருமையுள் ஐந்தடக்கல் ஏழேழ் பிறப்பு நன்மை ஆன நல்ஆமையை வழிபட ஏதுவாய் இங்கு நிர்மாணித்துள்ளனர். ஸ்ரீரங்கம் கோவிலின் ஜீவசமாதியின் அடிநாதமாக இருப்பதும் ஆமையாரே.

மேலும் மாவரைக்கும் திருகையும் {அரவைக்கல்} இங்குள்ளது. சீரடியில் ஒருசமயம் பாபா கோதுமையை திருகையில் இட்டு அரைத்து அந்த மாவை சீரடியின் எல்லைகளில் கொட்டி வரச்செய்தார். அருகிலுள்ள ஊர்களில் பரவிக் கொண்டிருந்த காலரா நோயே அவ்விதமாக அரைக்கப்பட்டு, சீரடியில் பரவாமல்  எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.  நாச்சியாபுரம் பாணிபாபா கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் தமது பிறவித் துயர்களிலிருந்து விடுபடவும், உற்றவர் பிணி விலகவும், மற்றவர் பசி போக்கவும் கோதுமை கம்பு கேழ்வரகினை அரவையிலிட்டு  அரைக்கின்றனர்.

இங்கு கம்பும் கேழ்வரகும் அரைக்கப்பட்டு, கோசாலையிலுள்ள பசுக்களின் பசி தீர்க்கப்படுகிறது. பாபாவின் முன்பாக அரைபடுவது தானியம் மட்டுமல்ல, நாம் அறிந்தும் அறியாமலும் செய்திட்ட பாவங்களும் நம் அகந்தையும் தான்.

பாணிபாபா கோவிலுக்கு அருகாமையில் மருத்துவரின் நண்பருக்கு சொந்தமான இடத்தில் பசுமடமும் அமைத்து  இங்கு கோசாலையில் பசுக்களை பராமரித்து வருகின்றனர்.

ஒரு வருடத்திற்கு முன்னதாக தொடங்கிய போது பசுமடத்தில் 12 பசுக்கள் இருந்தன,  இப்போது 24 பசுக்களும், கன்றுகளும் பராமரிக்கப்படுகின்றன. பசுமடத்தில் உள்ள பசுக்கள் மேய்ச்சலுக்காக பகலில் வெளியே விடப்படுகிறது. மேய்ந்த பசுக்கள் மாலையில்  கொட்டிலுக்கு திரும்பி விடுகின்றன. பசுக்களையும், பசுமடத்தையும் பராமரித்திட நான்கு பணியாளர்கள் உள்ளனர். மேலும் இங்கு கோ பூசையும் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகின்றது.   

தூணி நம் அனைவரின் எல்லாவித நோய்களும் தீர பாபாவை நினைத்து எரிக்கப்படுகிறது்.  சீரடியில் பாபா ஏற்றி வைத்தது இங்கும்.  அவரவர்களே சாயியை வேண்டி ஏற்றலாம். நவசம்பத்துகள் கொண்டு எரிக்கப்படுகிறது்.  ஒரு வாரத்துக்கோ, மாதத்துக்கோ, ஆண்டு முழுவதுமாகக் கூட நலம் வேண்டி நாளும் ஏற்றலாம்.

இங்கு வருடத்திற்கு நான்கு விழாக்கள் நடக்கின்றன. குருபூர்ணிமா, விஜயதசமி, இராமநவமி, வருசாபிசேகம் முதலியன வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் மற்றும் வெளியூர்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  வந்து கலந்து கொள்கிறார்கள். அப்போது அன்னதானமும் நடத்தப்படுகிறது. எந்தெந்த ஊர்களில் இருந்தோ மக்கள் அதிகளவில் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

கோவிலில் நடைபெற்ற விழாக்களில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் உயர்திரு ஏ.ஆர். லஷ்மணன் அவர்கள் தம் துணைவியாரோடு,  பிள்ளையார்பட்டி கோவில் தலைமை பிச்சைக்குருக்கள் அவர்கள், ஸ்ரீஸ்ரீ ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள்,  மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள், இறைநெறிச் செல்வர் ஹெச். இராஜா அவர்கள், கலைமாமணி பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி கோ. சிவசிதம்பரம் MD அவர்கள், தருமை ஆதீனப்புலவர்  சொ.சொ. மீ.  சுந்தரம் ஐயா அவர்கள்,   கம்பன் அடிசூடி   பழ. பழனியப்பன் ஐயா அவர்கள், உயர்திரு எஸ்.பி. முத்துராமன் ஐயா அவர்கள், மனிதநேயர் அன்புமிகு கூத்தகுடி ஜவகர் ஐயா அவர்கள்,  சிறுவயதில் பாபாவின் மடி வளர்ந்து அருளாசி பெற்றவரான ஸ்ரீ சாய் சுகந்தி தாயாரம்மா (108 வயது)அவர்கள், சென்னை சாய் ஐயப்ப பக்தசபை சாந்தாராம் ஐயா அவர்களின் தலைமையிலான இசைக்குழுவினர், பிரபல சின்னத்திரை  மற்றும் திரையிசைப் பாடகர் சுதர்சன் சுகராக் இசைக்குழுவினர் அவர்கள், வீணை இராதா   ஆச்சி அவர்கள், அமெரிக்க மருத்துவ மாணவி ஹிரண்யா [நாச்சியாபுரத்தின் பேத்தி], ஜெயங்கொண்ட விநாயகர் பள்ளியின் முன்னாள் மாணவர் நாராயணன்கோவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர்.

வியாழக்கிழமைகளில் மட்டுமின்றி எல்லா நாள்களிலும் கோவிலின் பிரசாதங்களும், மக்கள் கொண்டு வரும் பிரசாதங்களும் பாபாவிற்கு நைவேத்யமாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

பக்தர்களின் குடும்பத்தாரின் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றிற்கு முன்கூட்டியே தெரிவித்தால் அர்ச்சனை செய்யப்படுகிறது.  நேரில் வருபவர்கள் பாபாவிற்கு அபிசேகமும் செய்யலாம்.

நாச்சியாபுரம்  ஜெயங்கொண்ட விநாயகர் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலைப் பள்ளியிலும், கம்பனூர் துவக்கப்பள்ளியிலும் பயிலும் மாணவ, மாணவியர்க்கு அவ்வப்போது படிப்பு சம்பந்தப்பட்ட பரிசுப் பொருள்கள், மற்றும் சிறுசிறு புத்தகங்கள் கோவில் சார்பாக வழங்கப்பபடுகிறது.

பூசைகள் செய்யும் பூசாரி, நிர்வகிக்கும் மேலாளர் மற்றும் உதவியாளர்கள் அனைவரின் தினப்பணிகள்  கோவிலில் நேர்த்தியாக நடந்து வருகின்றன.

கோவில் திறந்திருக்கும் நேரம் தினமும் காலை 6மணி முதல் இரவு 7.50 வரை.

நாள்தோறும் நான்கு ஆரத்திகள் நடைபெறுகின்றன. ஆரத்தி நேரங்களாவன , சரியாக

  • 7.00 மணி
  • 12.00 மணி                         
  • 6.00 மணி
  • 7.20 மணி

பூந்தோட்டமும், மரங்களும் நன்கு பராமரிக்கப்படுகின்றன.  நந்தவனம் நன்கு பராமரிக்கப்பட்டு நான்கு வேளை ஆரத்தி்க்கும் சாயீக்கு இங்கிருந்து தான் பூக்கள் கொய்யப்படுகின்றன. நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்மக்கமலம் பாணிபாபாவின் நந்தவனத்தில் பூக்கின்றது. நிழல்தரும் செர்ரி மரங்கள் இரண்டு பேணப்படுகின்றன. அவைகள் தரும் பழங்கள் இனிப்புநீரைக் குறைக்கின்றன என்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரும்பி தரையிலிருந்து பொறுக்கி எடுத்து மண் ஊதி சுட்டபழம் போல் உண்கிறார்கள்.  கொய்யா, வாழை, அருநெல்லிக்காய், பப்பாளி மரங்கள் ஒன்றிரண்டு உள்ளே வளர்க்கப்படுகின்றன.

வருகின்ற மக்களுக்கு தாகம் தணிக்க ஆர்.ஓ தண்ணீரும், பாட்டில்  தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கின்ற்ன.

கோவிலைச் சுற்றிலும்   சுவற்றில் சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

 

அரங்கனைப் போல நின்றகோலம், அமர்ந்தகோலம், சயனக்கோலம் என மூன்று கோலங்களிலும் காட்சி தருகிறார். சூட்சுமமாய் பிரபஞ்சத்தில் கலந்து அருள் புரிகிறார்  நம் நாச்சியாபுரம்  பாணிபாபா.

பாபா உலகமெங்கும் இருந்து உயிர்களைக் காக்கிறார்.  நம்பிக்கையோடு வணங்குபவர்கள் வாழ்க்கையை வளமாக்குகிறார்.  நாச்சியாபுரத்தில் பாணிபாபாவாக  இருந்து பல அற்புதங்கள் புரிகிறார். சாயிதேவனின் அருள்பெற நமக்குத் தேவை நம்பிக்கை, முயற்சி, பொறுமை.

வாழ்க பிரபஞ்சம்

பிரம்மஞானி முத்தையா                    

எண்.5, 4வது பிரதான சாலை,        

நடேசன்நகர், விருகம்பாக்கம்,                                                    

சென்னை 600092.

E,mail : nsm.healingtouch@gmail.com 

சீரடி சாய் ஸ்ரீ பாணிபாபா பீடம்,

நாச்சியாபுரம்,கம்பனூர், காரைக்குடி

Mobile : 9080321378, 6381927171, 9841037533

              E,mail : sai@paanibaba.com

Website : www.paanibaba.com

 

 

 

Leave a Reply