Sing-Ind Voice

Breaking News

Capture

டாக்டர் சுப.திண்ணப்பன்
சார்புநிலைப் பேராசிரியர் சிம் பல்கலைக்கழகம் சிங்கப்பூர்

நம் சிங்கப்பூர்க் குடியரசின் ஆறாவது அதிபராகப் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றித் தமிழர்க்கும் இந்தியர்க்கும் தன்னிகரில்லாப் பெருமை சேர்த்தவர் திரு எஸ்.ஆர்.நாதன் அவர்கள். 1980களில் சிங்கப்பூர் வானொலியில் நாள்தோறும் இடம்பெற்று வந்த என் ‘எளிய தமிழ்’ நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்ந்தவர்களில் அவரும் ஒருவர். பின்னர் இந்து அறநிலையத்துறைத் தலைவராக இருந்தபோதும் ‘ஸ்ட்ரைட் டைம்ஸ்’ நிறுவனத் தலைவராக இருந்தபோதும் அவரிடம் ஒரு சில வேளைகளில் அளவளாவி உள்ளேன். அவரும் தீபாவளி, புத்தாண்டு வாழ்த்துகளை அனுப்பி வைப்பார்.

1999 ஜூலை மாதத்தில் நம் அரசாங்கத்தின் வெளியுறவுத் துறையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. அதன் தலைமைப் பொறுப்பு வகிக்கும் திரு எஸ்.ஆர்.நாதன் என்னைச் சந்திக்க விரும்புவதாக அந்த அழைப்பின் வழி அறிந்து சென்றேன். அச்சந்திப்பில்தான் அவர் தாம் தமிழ் கற்க விரும்புவதாகவும் என்னால் அவருக்குத் தமிழ் கற்றுத்தர இயலுமா எனவும் கேட்டார். தாம் சிறுவனாக இருக்கும்போது இருமுறை தமிழ்மொழி கற்க இரண்டு பள்ளி ஆசிரியரிடம் சென்றதாகவும் அவர்கள் இருவருமே தொடங்கிய சில மாதங்களிலேயே இறந்துவிட்டதாகவும் இதனை அறிந்த அவரின் அன்னையார் ‘நீ தமிழ் கற்றது போதும், ஆசிரியர்கள் இறப்புக்கு ஆளாகவேண்டாம், மலாய் கற்கச் செல்’ என்று கூறியதாகவும் என்னிடம் அவர் சொன்னார். மேலும் 1900களின் தொடக்கத்தில் சென்னையிலுள்ள கிறிஸ்துவ இலக்கிய மன்றத்தினர்(CLS) ஐரோப்பியர்கள் தமிழ் கற்றுக்கொள்வதற்காகRev Percy c kerslake and C.R. NarayanaswamiAiyarஎன்னும் இருவர் ஆங்கிலமும் தமிழும் கலந்த நடையில் எழுதி வெளியிட்ட (Tamil Course for European Schools) ஐந்து புத்தக வரிசை நூல்களையும் தாம் வாங்கி வைத்திருப்பதையும் எடுத்து என்னிடம் காட்டினார். சிங்கப்பூரில் பல பெரிய பதவிகளை வகித்த ஒருவர் – எழுபதாண்டுக்கு மேற்பட்ட ஒருவர் இத்துணை ஆர்வத்துடன் கேட்கும்போது நான் மறுப்பது முறையாகுமா?‘சரி கற்றுத் தருகிறேன்’ என உடனடியாக உடன்பட்டேன். ‘சரி சில மாதங்கள் கழித்து நான் சொல்கிறேன். அப்போது தொடங்கலாம்’ என்று சொல்லி அனுப்பினார்.

பிறகு திரு நாதன் செப்டம்பரில் அதிபராகப் பதவி ஏற்ற பின்னர் ‘என்னை அழைத்து அலுவலகத்துக்கு வருகிறீர்களா? வீட்டுக்கு வருகிறீர்களா?’ எனக் கேட்டார். நான் வீட்டுக்கு வருவதாகச் சொன்னவுடன் ‘அப்படியானால் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை வைத்துக்கொள்ளலாம்’ என்றார். அதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் இல்லம் சென்று தமிழ் கற்பித்தேன். சரியாக 10 மணிக்குச் சென்றதும் என்னை அன்புடன் வரவேற்று உபசரிப்பது அவர் வழக்கம். திரு எஸ்.ஆர்.நாதன் பேச்சுத்தமிழில் சரளமாகவும் மரபு மாறாமலும் பேசும் ஆற்றல் உடையவர். எனவே அவருக்குத் தமிழ் கற்பிப்பது எனக்கு எளிமையாக இருந்தது. அதாவது கேட்டல், பேசுதல் திறன் மிக்க ஒருவருக்குப் படித்தல், எழுதுதல் திறன்கள்மட்டும் கற்பிப்பது எளிதான ஒன்றுதானே! அவரிடம் உள்ள நூல்களை அடிப்படையாகக் கொண்டே முதலில் படிக்கச் சொல்லிக் கொடுத்தேன். படிப்பதற்குப் பல மாதங்கள் செலவிட்ட பின்னரே எழுதக் கற்பிக்கத் தொடங்கினேன். அவரைப் பொறுத்த வகையில் எதனையும் கூர்மையாகக் கவனித்து நினைவில் நிறுத்திக்கொள்ளும் ஆற்றலும், ஒருமுறை சொன்னாலே விடாது பற்றிக்கொள்ளும் பண்பும் மிக்கவராகத் திகழ்ந்தார். படிப்படியாகத் தொடக்கநிலைப் புத்தகத்தில் தொடங்கித் தமிழ்முரசு இதழிலுள்ள செய்திகளைப் படிக்க ஆரம்பித்தார். படிக்கும்போது களைப்பு ஏற்படும்போது பாதி நேரத்திலேயே சிற்றுண்டியும் தேநீரும் வந்துவிடும். அதனை அருந்திக்கொண்டே எங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி உரையாடத் தொடங்கிவிடுவோம். அந்த வகையில் அதிபர் அவர்களிடமிருந்து நான் பல செய்திகளை அறிந்திருக்கிறேன். அவரது அபாரமான நினைவாற்றல்களைக் கண்டு அதிசயித்துள்ளேன்.இடையிடையே திருக்குறள், சிலப்பதிகாரம் கம்பராமாயணம் முதலிய இலக்கியச் செய்திகளையும் அவருக்கு எடுத்துக்கூறுவேன்.

எழுதக் கற்றுக் கொடுத்தபோதுதான் அவரது எழுத்து அழகாகவும் தெளிவாகவும் இருந்ததை அறிந்தேன். ‘சொல்வது எழுதுதல்’ (டிக்டேஷன்) முறையில் கற்றுத் தாருங்கள் என்று அவரே வலியுறுத்துவார். படிக்கும்போது நான் படிக்கத் தொடங்கினால் ‘நானே முயன்று பார்க்கிறேன்’ என்று அவரே சொல்வார். தன் முயற்சியில் தளராத நம்பிக்கை உடையவர் அவர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

தமிழகம் சென்று வரும்போதெல்லாம் புதுப்புது கதை நூல்கள் வாங்கி வந்து படிப்போம். ஞாயிறன்று அவருக்கு அலுவல் இருக்குமானால் ஓரிரு நாட்களுக்கு முன்னமே தொலைபேசியில் அழைத்து ‘வரவேண்டாம்’ என்று கூறிவிடுவது அவர் வழக்கம். தமிழவேள் கோ சாரங்கபாணி நூற்றாண்டு விழாவில் ‘தமிழில் நீங்கள் உரையாற்ற வேண்டும்’ என்று வேண்டியதற்கேற்ப உரையாற்றினார். இவ்வாறே திருவள்ளுவர் சிலையை குவின்ஸ்வே காமன்வெல்த் முனீஸ்வரர் ஆலயத் திருமண மண்டபத்தில் திறக்கும்போதும் தமிழில் உரையாற்றி என்னை மகிழ்வித்தார். இந்த உரையாற்ற அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் பயிற்சியும் கண்டு நான் வியப்படைந்தேன். சிறு சிறு விஷயத்தில் செம்மையாகச் செயலாற்ற வேண்டும் என்னும் வேட்கை அவரிடம் எப்போதும் உண்டு.

தமிழ் கற்றுக் கொடுக்கத் தொடங்கிய முதல் மாதம் முடிந்த பின்னர் ஓர் உறையில் பணம் வைத்துக்கொடுத்தார். உங்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதே ‘நான் பெற்ற பேறு’ எனக்கூறி வாங்க மறுத்துவிட்டேன். குரு காணிக்கை என்று பலமுறை வற்புறுத்திக் கூறியும் நான் வாங்க மறுத்துவிட்டேன். எனவே அவர் வெளிநாடுகளுக்குச் சென்று வரும்போதெல்லாம் எனக்கென்று ஏதேனும் ஒரு பொருளை மறவாமல் வாங்கி வந்து அன்பளிப்பாகக் கொடுத்து அகம் மிக மகிழ்வார்.

‘தமிழை எளிமையாக எல்லாரும் பேசிப் பழக வேண்டும்’ எனப் பேச்சுத் தமிழை வலியுறுத்துவார். ‘தமிழர் முன்னேற்றமே தமிழின் முன்னேற்றம்’ என்று கருதுபவர் திரு எஸ்.ஆர்.நாதன். எனவே தமிழர்கள் தங்கள் பொருளாதாரத்திலும் வாழ்விலும் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்குக் கல்வியில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் உடையவர் அதிபர். சிண்டா(சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகம்} வழங்கும் உதவிகளை உரியவர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லையே என்று அடிக்கடி அவர் கவலைப்படுவார். சமூக நலனில் அவருக்கிருக்கும் அக்கறை, நாட்டம் அவர் பேச்சில் தென்படுவதை நான் கண்டிருக்கிறேன்.

நான் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் தமிழரல்லாத மாணவருக்குத் தமிழ் கற்பித்து வந்தேன். அந்தப் படிப்பு, மாணவர் பற்றி அடிக்கடி என்னிடம் வினவுவார். அவ்வகுப்பில் முதன்முதலாக மூன்றாம் நிலை வரை படித்த ஒரு சீன மாணவர், ஒரு மலாய் மாணவி, ஒரு தாய்லாந்து மாணவர், ஒரு மொரீசியஸ் மாணவர் ஆக நால்வரைத் தம் வீட்டிற்கு அழைத்துத் தேநீர் விருந்து அளித்து உபசரித்து அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். மேலும், அவர்முயற்சியில் பத்தாயிரம் வெள்ளி வரை நன்கொடை பெற்றுத் தந்து அந்த நான்கு மாணவர்களையும் தமிழகத்திற்கு 10 நாட்கள் சுற்றுலா மேற்கொள்ள வழிவகுத்தார். நான் அவர்களைச் சென்னை, மதுரை, மகாபலிபுரம், தஞ்சாவூர், கன்னியாகுமரி முதலிய இடங்களுக்கு அழைத்துச் சென்று வந்தேன். இவ்வாறே தீபாவளி ஒளியூட்டு விழாவிற்குச் சிராங்கூன் சாலைக்கும், தைப்பூச விழாவில் தண்டாயுதபாணி கோயிலுக்கும் ஏனைய இடங்களுக்கு அவர் சிறப்பு விருந்தினராக வரும்போதெல்லாம் என்னிடம் தமிழ் கற்கும் தமிழரல்லாத மாணவர்களை அழைத்து வருமாறு சொல்வார். அவர்களிடம் உரையாடி மகிழ்வார். அந்த மாணவர்களும் அதன்வழி ஊக்கமும் ஆக்கமும் பெற்றார்கள். அவர்கள் பெற்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

என் பவள விழாவிற்கு அதிபர் நாதன் சிறப்பு விருந்தினராக வந்து எனக்குப் பெருமை சேர்த்ததை நான் என்றும் மறவேன். அவ்விழாவின்போது இன்று ‘என் குருவின் பிறந்த நாள், சிஷ்யன் என்ன சொல்ல முடியும்’ என்று அவர் உரையாற்றியதை நினைத்து நினைத்து அவரது பெருந்தன்மையைப் போற்றி மகிழ்கிறேன். மேலும், அவரது புத்தகம் ஒன்றை வெளியிட்டபோது நான் செல்ல இயலவில்லை. திரு ஆ. பழநியப்பன் மூலம் எனக்கு அனுப்பிய நூல் ஒன்றில் To my guru Dr SP. Thinnappanஎன்று எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்ததை அறிந்து
‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து’

என்னும் திருக்குறளின் பொருளாகத் திகழ்பவர் அதிபர் நாதன் என்பதை அறிந்தேன். அவர் என்னைக் குருவாக அழைப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. என்னிடமிருந்து அவர் கற்றுக் கொண்டதைவிட அவரிடமிருந்து நான் பெற்றுக்கொண்டதே அதிகம். அவருக்குள்ள அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஈடு இணையில்லை.

அதிபர் நாதன் தாம் மட்டும் தமிழ் படித்தால் போதாது, மற்ற இனத்தவர்களும் நம் தமிழைப் படிக்கவேண்டும் என்பதிலும் மிகுதியான நாட்டம் உடையவர். இதன்பொருட்டு சிண்டாவின் துணையோடு தோபயாவிலுள்ள நான்கின மக்களுக்கும் பொதுநிலையில் செயற்படும் சமுக மன்றத்தில் 10 வாரம் பேச்சுத்தமிழ் மற்றஇனத்தவர்களுக்கு நான் கற்பிக்க அவர் ஏற்பாடுசெய்தார். மேலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத்தூதர்கள் தமிழ்கற்க நூல்கள் வாங்கிகொடுத்தும், ஆசிரியர்கள் ஏற்பாடு செய்துகொடுத்தும் உதவியுள்ளார். மேலும் பல சமுக மன்றங்கள் மற்ற இனத்தவர்க்குத் தமிழ் கற்பிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்பதும் அவர் ஆவல்.

ஜூலை 31ஆம் நாள் பக்கவாத நோய் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற நாதன் 21 நாள்கள் சுயநினைவிழந்து இருந்தார். பின் ஆகஸ்ட் 22 காலமானார். நான் அவரை இறுதியாக ஜூலை 29ஆம் நாள் அவர் இரத்த சுத்திகரிப்புக்குச் சென்ற நிலையில் மருத்துவ மனைக்கு வரச்சொல்லச் சென்றுபார்த்தேன்.முக்கால் மணி நேரம் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். 31ஆம் தேதி இல்லம் வரச்சொன்னார். அன்று போகமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஆகஸ்ட் 5ஆம் நாள் மருத்துவ மனைக்கு நானும் என் மனைவியும் சென்று “ஐசியூவி”ல் உணர்விழந்து இருந்த அவரைப் பார்த்துவிட்டு அவர் மகள், மகன் இருவரிடம் ஆறுதல் கூறிவந்தோம். பின்னர் அவர் இறப்புக்குப் பிறகு இல்லம் சென்று இறுதி மரியாதை செலுத்திவந்தோம்.

மனித நேயமிக்க மக்கள் அதிபராக 12 ஆண்டுகள் பணியாற்றிய நாதனுக்குச் சிங்கப்பூரில் வாழும் பல இனம், மொழி, மதம் சார்ந்த மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தினர். அரசாங்க மரியாதையுடன் அவர் நல்லுடல் வழியனுப்பப்பட்ட்து. அதிபர், பிரதமர், அமைச்சர்கள், வெளிநாட்டுத்தூதர்கள் புகழஞ்சலி செலுத்தினர். அரசாங்கம் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகக் கலாசார மண்டபத்தில் நடத்திய இரங்கல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நாதனுக்கு விருப்பமான கவிஞர் வைரமுத்துவின் ‘தஞ்சாவூர் மண்ணெடுத்து’ என்று தொடங்கும் தமிழ்ப்பாடல் ஒலியேற்றப்பட்டது.செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல நாதனும் தான் செத்தும் தமிழையும் தமிழரையும் உயர்த்தி விட்டுச் சென்றுள்ளார்.

அதிபர் நாதன் ஆங்கிலத்தில் பல நூல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய தன்வரலாற்று நூல் உழைப்பின் உயர்வு என்னும் பெயரில் தமிழாக்கம் கண்டுள்ளது. அதன் வெளியீட்டு விழாவில் மதிப்புரை வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.அவரின் முதல் ஆங்கில நூலின் பெயர் Why I am Here? நான் ஏன் இங்கே இருக்கிறேன்? சிந்தனையைத் தூண்டும் இவ்வினாவைக் கேட்டு நாம் ஒவ்வொருவரும் செயலாற்றிச் சிறப்படைவோம்.
சிங்கைச் சிறப்பினைச் செகத்தினில் என்றும்
மங்காது இருக்க மாபெரும் பணிசெய்தீர்
எங்களை விட்டு ஏகினீர் விண்ணுக்கு
உங்களை மறவோம் ஒருநாளும் நாங்களே

Leave a Reply