பிரபல தமிழ் எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் வீர காவியத்தை பற்றி, குறிப்பாக தமிழர்களில் , தெரியாதவர்களே இல்லை எனலாம். பல நாட்களாக படிக்கவேண்டும் என்ற கனவோடு அப்புத்தகத்தை வாங்கும் தேடலில் நான் இறங்கியபோது, தேவதை போல எங்கிருந்தோ திடீரென்று என் முன்னே தோன்றிய என் தோழி, ‘கவலையே படாத, நான் வாங்கித் தருகிறேன்’ என்று அருள் புரிந்தாள். அதற்காக காத்திருந்தபோதுதான் இன்ப அதிர்ச்சியாக ஒரு விளம்பரத்தை முகநூலில் பார்க்க நேர்ந்தது.
அதாவது, ‘சிங்கப்பூரில் முதன் முறையாக பொன்னியின் செல்வன் காவியம், மேடை நாடக வடிவில் அரங்கேற்றப்பட உள்ளது. அதற்கான துணை நடிகர்கள் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் அணுகவும்’ என்ற விளம்பரத்தை படித்தவுடன் இரட்டிப்பு மகிழ்ச்சி! நாம் படித்து ரசித்து உள்வாங்க நினைத்த ஒரு மாபெரும் காவியத்தில் ஒரு கதாபாத்திரமாகவே நடித்து, அந்த காவியத்தை தெரிந்து கொள்ளப் போகிறோமா என்று நம்பவே முடியாத ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனேன். மூழ்கி எழுந்து, பிறகு ஒரு வழியாக பதிவு செய்து விட்டேன்.
தேர்வுக்கான பட்டறை சிங்கையில் நடந்தது. அதில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதில் ஒரு சிலர் தேர்வானார்கள், நான் உட்பட்ட.
பின்பு, அதற்கான பயிற்சி, நாடகம் அரங்கேறும் நாட்களான ஏப்ரல் 2 ,29 மற்றும் 30 தேதிகளிலிருந்து சரியாக ஒரு வாரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சி என்றால் சாதாரணப் பயிற்சி அல்ல. காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு 10.30 மணிவரை நாள் முழுக்க கடுமையான பயிற்சி எடுத்தோம். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு காட்சியாக பலமுறை பயிற்சி செய்வோம்.
அந்த வகையில், உள்ளூர் கலைஞர்கள் அனைவரும் ஏற்று நடித்த சோழ நாட்டு மங்கையர் கதாபாத்திரத்தில் ஒருவராக, நானும் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி! ஒரு தனிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு சவால் என்றால், பல கதாபாத்திரங்களுடன் கூட்டமாக ஒரு மேடையில் ஏறி நடிப்பதும் ஒரு சவாலே. ஏனென்றால், மேடையில் ஏறிவிட்டால் நடந்துகொண்டிருக்கும் அந்தந்த காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் ஏற்ப, உடல் மொழி மூலமாகவும், நேர்த்தியான முக பாவனைகளாலும், மேடையில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கவேண்டும். இதில் கைதேர்ந்து விட்டால், நடிப்பு நம் கைவசமே.
பொன்னியின் செல்வன் நாவலின் முதல் காட்சி அமைப்பே ஆடித் திருவிழா கொண்டாட்டத்துடன் கோலாகலமாக துவங்கும். தோழியர்களாகிய எங்களில் பலர், ஏரிக்கரையில் தெய்வத்தை வேண்டி, பூஜை செய்வதும், அந்த நீரோடையில் விளக்கு ஏற்றி விடுவதும், ஒரு சிலர் அந்த நீரோடையின் அழகை ரசிப்பதும், வான் நட்சத்திரத்தை பார்த்து வியப்பதும், எதிர்பாராமல் நண்பர்களை அங்கு சந்தித்து, விசாரிப்பதுமாக இருக்கும் வேளையில் இசையும் நடனமும் ஒருசேர, சிவன், கண்கவர் அலங்காரத்துடன் கூடிய புஷ்ப பல்லக்கில் அசைந்தாடியபடி, அங்கே வர, கூட்டத்தில் அனைவரும் ஒருசேர ‘தோடுடைய செவியன் விடை ஏறி….’ என்ற பாடலைப் பாடியபடி சேவித்தெழுவார்கள்…இப்படியாக கண்ணுக்கு மட்டுல்லாது, செவிக்கும் விருந்தாக அமைக்கப்பட்டு , அக் காட்சி தொடரும். நடிப்பு தவிர நாடகத்தின் காட்சியமைப்பிற்கு தேவையான மூன்று சிறந்த தெய்வீகப் பாடல்களையும் நாங்கள் கற்றோம், இப்பாடல்கள் எங்கள் அனைவரின் நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்று விட்டது. இது சுப்ரபாதமாகவும், தாலாட்டுப் பாட்டாகவும் மாறி மாறி, எங்களில் பலரின் வீடுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது என்றால் பாருங்களேன்! இதனுடன், ஒரு சிலர் குழுவாகப் பிரிக்கப்பட்டு, காட்சியமைப்புகளுக்கேற்றவாறு தேவையான பரதத்தினையும் கிராமிய நடனத்தையும் சேர்த்து கற்றனர். இந்த பயிற்சியின் மூலம் , நடிப்பின் முக்கியமான பல நுணுக்கங்களை கற்ற கொள்ள முடிந்தது. அது மட்டுமல்ல, கைதேர்ந்த பல மூத்த கலைஞர்களிடமிருந்தும் நடிப்பின் ஒருசில முக்கிய அம்சங்களை கற்கவும் , நட்பு பாராட்டவும் இது ஒரு அறிய வாய்ப்பாக அமைந்தது. மொத்தத்தில், என் நாவலை படிக்கும் கனவு அதில் நடித்து நிறைவேறியது, என் மனதில் பசுமையாக, என்றும் நீங்கா நினைவுகளுடன் நிலைத்திருக்கும் என்பது உறுதி.. இதை ‘a Dream come True’ moment என்றே சொல்லலாம்.
இந்நாடகத்தின் இயக்குனர் திரு பிரவீன் அவர்கள், அது சிறியதோ பெரியதோ , பயிற்சியின் போது, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கி செதுக்கி எடுத்தார் , அவர் மனதில் நினைத்ததை வெளிக்கொணரும்வரை, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சிறு சிறு அங்க அசைவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து , நுணுக்கமாக செதுக்குவார். மேடையில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவசியம் ஒரு பின்னணிக் கதை இருக்க வேண்டும் என்ற உறுதியுடன், அதற்கு உயிரூட்டம் கொடுத்தது, கதைக்கு மேலும் மெருகூட்டுவதாக இருந்தது.
முக்கியமாக, இந்நாடகம் சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டும் வகையில் கொண்டாடப்படும் தமிழ் மொழி மாதமாகிய ஏப்ரல்(2017) மாதத்தின் ஒரு அங்கமாக அரங்கேறியது. அதில் தமிழ் மொழிக்கு நான் ஒரு அணிலாக இருந்து, எனது ஒரு சிறு பங்கினை அளித்ததில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.
இந்த பிரமாண்ட காவியம், உலகில், சிங்கப்பூரின் பிரபல அரங்கமான Esplanade அரங்கில் ஏப்ரல் 28 , 29 மற்றும் 30 தேதிகளில், மூன்று நாட்களாக, சிறப்பாக அரங்கேறியது. இதனை சிங்கப்பூரிலுள்ள பெரும்பான்மையான தமிழர்கள், மொழிமேலுள்ள பற்றினாலும், இக்காவியத்தின் மேலுள்ள காதலாலும், வந்திருந்து கண்டு களித்தனர்.
மேலும் இந்நாடகம் நடைபெற்ற நான்கு மணிநேரமும் (இடைவேளையும் சேர்த்து) நேரம் செல்வதே தெரியாது, எங்குமே எந்த தொய்வுமே இல்லாது, தங்களை கட்டிபோட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், நாடகம் முடிந்த பின்பும் கிட்டத்தட்ட 5 நிமிடங்களுக்குமேல் நீடித்த கைதட்டல் மூலம் பார்வையாளர்கள் தங்களின் மனப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இந்நாடகம் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாக ‘Talk of the town’ ஆகவே, பலராலும் பேசப்பட்டது.
– ஹேமா பிரபாகர்