முனைவர் மு. இளங்கோவனின் “இசைத்தமிழ்க் கலைஞர்கள்” என்னும் நூல் இசைத் துறையுடன் தொடர்புடைய 5764 பேர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வல்லுநரையும் ஒற்றை வரியில் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா,டென்மார்க்கு, கனடா, இங்கிலாந்து, பிரான்சு, பர்மா, ஆஸ்திரேலியா, நார்வே உள்ளிட்ட நாடுகளில் வாழும் பல்துறைக் கலைஞர்களின் வரலாற்றை இந்த நூல் ஆவணப்படுத்தியுள்ளது.
இசைத்தமிழ்க் கலைஞர்களின் பெயர்கள் அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. தஞ்சைப் பெரியகோவிலில் இராசராசன் காலத்தில் தேவாரம் பாடியவர்கள், கருவி இசைத்தவர்கள், தமிழகத்தில் புகழ்மிக்க தவில், நாகசுரக் கலைஞர்கள், ஓதுவார்கள் மற்றும் திருமுறைப் புரவலர்கள், தமிழகத்தில் வழக்கில் இருந்த இசைக்கருவிகள், இன்றைய வழக்கத்தில் உள்ள பிறமொழிப் பெயரில் இசைக்கப்படும் இசைக்கருவிகள் எனப் பல பட்டியல்களால் இந்த நூல் ஆராய்ச்சி நூலாக விளங்குகின்றது.
இசைத்துறைக் கலைஞரின் பெயர், அவரின் ஈடுபாடான துறை, நாடு அல்லது ஊர் குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ள இந்த நூலில் அரிய தகவல்கள் பல கிடைக்கின்றன. நூலாசிரியரின் முன்னுரை இந்த நூலுக்கு வலிமைசேர்க்கின்றது. மியூசிக் அகாதெமி சென்னை அண்ணாமலை மன்றம், அண்ணாமலைப் பல்கலைக்கழம் மதுரை இசைக்கல்லூரிகள், சார்ந்து இயங்கிய – இயங்கும் இசை அறிஞர்கள் பலரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். திருக்கோவில்களிலும் திருமடங்களிலும் ஓதுவார்களாகத் திருமுறைகளைப் பாடியவர்களின் பெயர்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. வீணை, வயலின், நாகசுரம், தவில், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு இசை வல்லுநர்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. மேலும் சங்கு, உடுக்கை, பம்பை, மகுடம், வில், நாமுழவு உள்ளிட்ட கருவிகளை இசைக்கும் கலைஞர்களையும் இந்த நூல் ஆவணப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் இசைக்கலைஞர்கள் குறித்த விவரங்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
இசைத்துறையில் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள், இசைத்தமிழ் ஆர்வலர்களின் கையில் இருக்க வேண்டிய அரிய ஆவணம் இந்த நூல். ஒவ்வொரு கல்வி நிறுவனங்களின் நூலகத்திலும் இருக்க வேண்டிய நோக்கீட்டு நூல் இதுவாகும்.
பல்துறை இசை ஈடுபாடும், பன்னாட்டுத் தொடர்பும், ஆராய்ச்சி நுட்பமும், பதிப்பு அனுபவமும் கொண்டவர்களால்தான் இதுபோன்ற பணிகளைச் செய்ய முடியும். உலக அளவில் அமையும் பட்டியல் இந்த நூலில் உள்ளதால் விடுபாடுகள் ஏற்படுவது இயல்புதான். இந்த நூலில் இணைக்கப்பட வேண்டிய இசைக்கலைஞர்களின் பெயரும் பணிகளும் தங்களுக்குத் தெரிந்தால் muetamil@gmail.com என்ற முகவரிக்குத் தெரிவிக்குமாறு நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். செல்வ புவியரசனின் அணிந்துரை இந்த நூலுக்குச் சிறப்புச் சேர்க்கின்றது.
நூல்: இசைத்தமிழ்க் கலைஞர்கள்: நோக்கீட்டு நூல்
பக்கம் : 304
விலை: 350 ரூபாய்
நூல் கிடைக்குமிடம்:
வயல்வெளிப் பதிப்பகம்
37, 38 கிருஷ்ணா நகர் மெயின்ரோடு,
சூரியகாந்தி நகர், முத்தியால்பேட்டை
புதுச்சேரி – 605003
9442029053 / muetamil@gmail.com