சிங்கப்பூரில் கடந்த 38 ஆண்டுகளாகத் திருமுறை மாநாடு ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் மூன்று நாள் விழாவாக மிக விமரிசையாக நடந்தேறி வருகின்றன. சிங்கப்பூர் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் இதனை மிக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆறு ஆண்டுகளாக இவர்கள் திருமுறையை மக்களிடம் எடுத்துச் செல்ல நாடகம் என்ற வடிவத்தையும் பயன்படுத்தி வருகின்றார்கள். ”பித்தா பிறை சூடி” என்ற நாட்டிய நாடகத்தை முதன் முதலாக 2014ஆம் ஆண்டு மார்ச் 29 சனிக்கிழமை அன்று அருள் மிகு முனீஸ்வரன் ஆலயத்தில் (குவீன்ஸ்வேயில் உள்ள ஆலயம்) அரங்கேற்றினார்கள். பின்னர் இந்த நாடகம் அண்டை நாடான மலேசியாவின் ஜொஹூர் பாருவில் உள்ள அருள் மிகு இராஜ மாரியம்மன் ஆலயத்தில் பி. கோவிந்தசாமிப் பிள்ளை திருமண மண்டபத்தில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 24 சனிக்கிழமை மாலை நடந்தேறியது. அதை அடுத்து, திருநீலகண்டர் நாட்டிய நாடகம் அருள் மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை மாலை அரங்கேற்றம் கண்டது. மூன்றாவது நாடகமான திலகவதியார் இசை நாடகத்தை, திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் இந்து அறக்கட்டளை வாரியத்துடன் இணைந்து பி ஜி பி திருமண மண்டப மேடையில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி ஞாயிறு மாலை மேடை ஏற்றினார்கள்.
இது முதல் இந்த நாடகங்கள் இசை நாடகங்களாகவே அரங்கேற்றம் கண்டன.
பார்வையாளர்களின் ஒட்டு மொத்த பாராட்டையும் திலகவதியார் நாடகம் பெற்றது. அந்த நாடகத்தைக் கண்ட அருள்மிகு ருத்திர காளி அம்மன் ஆலய நிர்வாக் குழு உறுப்பினர்கள் தங்கள் கோவிலிலும் திருமுறை நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார்கள். எனவே 2017ஆம் ஆண்டு ”ஒரு நம்பி அப்பூதி” என்ற திருமுறை நாடகத்தை அருள் மிகு ருத்திர காளி அம்மன் ஆலயத் திருமண மண்டபத்தில் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் மேடை ஏற்றினார்கள். அந்த நாடகம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
இந்த இசை நாடகங்கள் அனைத்திலும், பாடுபவர்கள் திருமுறை மாநாட்டை ஒட்டி நடத்தப்படும் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவியர் மட்டுமே. நடிப்பவர்கள் எல்லோரும் அடிப்படையில் திருமுறையில் ஆர்வம் உடையவர்கள் – ஆனால் அலுவலகம் சென்று பல்வேறு துறைகளிலும் பல்வேறு நிலைகளில் பணிபுரிபவர்கள். வழக்கமாக, பல குடும்பங்கள் இதில் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்கின்றனர். அனைவருமே இது ஒரு சிவத்தொண்டு என்ற அடிப்படையில், எந்த வித சன்மானமோ பிரதிபலனோ இல்லாமல் அரன்பணி என்றேற்று, அன்பால் இணைக்கப்பட்ட குழுவாகப் பங்கேற்கின்றனர். சுமார் 75 பேர்கள் ஒவ்வொரு நாடகத்திலும் பங்கு பெறுகிறார்கள்
இந்த வரிசையில், தங்கள் ஐந்தாவது படைப்பை திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கினார்கள். 2018 ஆகஸ்ட் மாதம் 12ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை, சிங்கப்பூர் திருமுறை மாநாடு ஏற்பாட்டுக் குழுவினர் மீண்டும் இந்து அறக்கட்டளை வாரியத்துடன் இணைந்து பி.ஜி.பி திருமண மண்டப மேடையில் நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தர் என்ற திருமுறை நாடகத்தை நடத்தினர்.
திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு இராம கருணாநிதி அவர்கள் வரவேற்புரை வழங்க நாடகம் மிகச் சரியாக மாலை 6 -00 மணிக்குத் தொடங்கியது.
இந்த ஆண்டு நாடகம் திருஞான சம்பந்தர் வாழ்வில் நடைபெற்ற மூன்று சம்பவங்களின் தொகுப்பாக அமைக்கப் பட்டிருந்தது.
முதலாவது அங்கம் ஞானசம்பந்தருக்கு உமையம்மை தோணிபுரத்துக் குளக்கரையில் ஞானப்பால் கொடுக்கும் நிகழ்வாக அரங்கேறியது. ”தோடுடைய செவியன்” என்ற சம்பந்தர் தேவாரம் முக்கியப் பாடலாக அமைந்தது. மூன்று வயது சம்பந்தராக நடித்த செல்வன் தனஞ்செயனின் வேடம், ஒப்பனை, நடிப்பு, முக பாவனை – இவை எல்லோருடைய நெஞ்சங்களிலும் நீங்காத இடம் பெற்றது. செல்வனுக்குப் பெற்றோர்கள் கட்டாயம் கண்ணேறு கழித்திருப்பார்கள் என நம்புகிறோம். அவருடன் இக்காட்சியில் தோன்றி சிவபாத ஹிருதயராக நடித்த T A வெங்கடேஷின் பங்களிப்பையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
இரண்டாவது அங்கமாக திருநீல கண்ட யாழ்பாணர், ஞான சம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்களின் வாழ்வில் நடந்த யாழ் முறிப்பண் பாடும் நிகழ்வு அமைந்தது. ”மாதர் மடப்பிடியும்” என்ற சம்பந்தர் தேவாரம் முக்கியப் பாடலாக அமைந்தது.. திருநீல கண்ட யாழ்ப்பாணராக நடித்த சுப்பிரமணீயன் நாகராஜன் தாம் தோன்றிய ஒவ்வொரு காட்சியிலும் பலத்த கரவொலிகளை அள்ளிச் சென்றார். ரசிகர்களின் உள்ளம் கவர் கள்வனாகவே அன்று அவர் மாறிவிட்டார்.
மூன்றாவது அங்கமாக மருகலில் வைப்பூர் தனவணிகன் மகளுக்கு உற்ற இடரைத் தீர்த்து வைத்து, பாம்பு கடிந்து மாண்டு போன அவருடைய கணவனாக வரவிருந்தவனின் உயிரை சிவபெருமான் மீட்டுக் கொடுத்த நிகழ்வு நடித்துக் காட்டப் பட்டது. ”சடையாய் எனுமால்” என்ற சம்பந்தரின் தேவாரம் முக்கியப் பாடலாக இந்த அங்கத்தில் இடம் பெற்றது.
நாடகத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்கை இசை அளித்தது. பக்க வாத்தியமாக அமைந்த மணிகண்டன் அவர்கள் வயலின் இசையும், தேவராஜன் அவர்களின் மிருதங்க இசையும் துணையாக அமைய, செல்வி ஹர்ஷிதா பாலாஜி, செல்வி தனுஸ்ரீ வெங்கடேஷ், செல்வன் சித்தார்த் அரவிந்தன், செல்வன் ஆனந்த் மூர்த்தி ஆகிய நால்வரும் மிக அற்புதமாக, சிறந்த உச்சரிப்புடன், தெளிவாக, பொருள் புரியும்படி, வார்த்தைகளில் பாவம் சொட்டச் சொட்டப் பாடல்களைப் பாடி அவையோரைப் பரவசத்தில் ஆழ்த்தினார்கள். குறிப்பாகச் செல்வி ஹர்ஷிதாவின் சுபந்துவராளி ராகப் பாடல் மிகப் பலத்த கரவொலியைப் பெற்றது.
நாடகத்தின் இறுதியில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ஆர் ஜெயச்சந்திரன் நாடகத்தில் நடித்த அனைவருக்கும் நினைவுப் பரிசாக சேக்கிழாரின் பெரிய புராணம் மூலமும் உரையும் நூலை (மொத்தம் நான்கு தொகுதிகள்-) வழங்கிக் கலைஞர்களைக் கௌரவித்தார்கள். இந்து அறக்கட்டளை வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி திரு. த.ராஜசேகர் கலைஞர்களை வாழ்த்திப் பாராட்டிப் பேசினார்.
இரவு 8 45 மணி அளவில் எல்லோரும் விருந்து உண்ண, நாடகம் இனிதே நிறைவு கண்டது.
Article and Photo Courtesy: Mr A K Varatharasan