இந்து மகா சமுத்திரத்தில் ஆபிரிக்கக் கண்டத்திற்கு தென் கிழக்கே அமைந்துள்ள அழகான ஒரு தீவு, மொரிசியஸ் 1968ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியத்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டது. இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு குடியரசாக மாறியுள்ளது.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க எற்பாட்டில் ஒரு பயணத்தில் கலந்து கொண்டதின் வாயிலாக மொரிசியஸ் நாட்டை பற்றி சில விபரங்கள் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மொரிசியஸ் மக்கள் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருப்பதை என் சமீப பயணம் வழி தெரிந்து கொண்டேன். ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு குடில் அமத்துக்கொண்டு, அங்கிருந்து தாங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு சென்று வருகின்றனர். கரும்பு தோட்டங்களும் கடலும் தான் இந்த சிறு தீவை அலங்கரிக்கின்றன. சர்க்கரை உற்பத்தி ஒன்றை மட்டும் நம்பியிருந்தாலும், அனேக தேவைகளை இறக்குமதி செய்தாலும்; நாட்டின் மேம்பாட்டில் எந்த ஒரு குறையும் காண இயலாது. இந்த மகிழ்ச்சியான தகவலை, இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும், அண்மைய காலமாக சுற்றுலாத்துறை நல்ல மேம்பாடு கண்டு வருகிறது.
தீவின் நடுவே மலையும், மலைத்தொடரும், உயரத்தில், பச்சைப் பசேலென்று காட்சியளிக்கிறது. தீவைச் சுற்றிலும் சுத்தமான கடற்கரைகள், இயற்கை இன்னும் பாதுகாப்பாக உள்ளது என்பதை உணர்த்துகிறது.
குளிர்காலம், கோடைகாலம், இரண்டும் தான், மே முதல் அக்டோபர் வரை குளிர்காலம், தொடர்ந்து நவம்பர் முதல் ஏப்ரல் வரை கோடைகாலம்.
இங்குள்ள மக்கள் தொகையில், ஐம்பதொரு சதவிகித்தினர் இந்து சமயத்தை சார்ந்தவர்கள். நான்கு தலைமுறை இந்திய மக்கள் இங்கு உள்ளனர். இந்திய நாட்டின் பல் வேறு நகரங்களில் இருந்து சென்றுள்ளதை, அவர்கள் பேசும் மொழிகளிலிருந்து தெரிந்து கொண்டேன். இந்தி, போஜ்புரி, உருது, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்சு, கிரியோல் என பல்வேறு மொழி புழக்கத்தில் இருந்தாலும், ஆங்கிலமே ஆட்சி மொழியாக உள்ளது. கிரியோல் எனும் ஐரோப்பிய மொழிகளின் கலவை மொழியை அங்குள்ள மக்கள் சர்வசாதரணமாக பேசுகிறார்கள். மூன்று வம்சா வழியினர்க்கு தமிழை பொருளதார சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக, பேசும், படிக்கும் நிலை இல்லாமல் போய்விட்டது.
மஹாத்மா காந்தி ஆய்வு மையத்தின் பேராசிரியர் திரு ஜீவன் சீமன் எங்கள் பயணத்தின் நோக்கத்திற்கு மிக உறுதுணையாக இருந்து வந்தார். தமிழை பேசும் மொழியாக மாற்றுவதற்கு, பல நூல்களை வெளியிட்டுள்ளார். மையத்தை சுற்றிப் பார்ப்பதற்கும், அதன் சேவைகளை அறிந்து கொள்வதற்கும் திரு ஜீவன் சீமன் உதவியாக இருந்தார். அண்மைய காலமாக தாய் மொழியை உயிர்ப்பிக்க பல் வேறு. முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டு வரை தமிழை ஒரு பாடமாகக் கற்று வருகிறார்கள், இருப்பினும் தமிழை பேசுவது குறைவாகவே உள்ளது. வீட்டு மொழி கிரியோலாகவே உள்ளது.
சர் சிவசகுர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையம், தீவிற்கு கிழக்கே அமைந்துள்ளது. மிகப்பெரிய நகரம் போர்ட் லூயிஸ் தான் மொரிசியஸின் தலை நகரம். ஒன்பது மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரத்து நாற்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது, சிங்கப்பூரை விட மூன்று மடங்கு பெரிது எனலாம்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என அவ்வையார் சொல்லிற்கேற்ப, கோயில்கள் பல, தீவை சுற்றிலும் உள்ளன. என்ன பக்தி! கங்கா தலா, கைலாசநாதர், முருகன், அம்மன் கோயில்கள், பக்தி பரவசத்தை தூண்டுவதற்கு என்றே நிறுவப்பட்டதாகத் தோன்றுகிறது. கோயில்களில் வழிபாடு முறையாக நடைபெறுவதை காணமுடிந்தது. கிராண்ட் பேசின் என்ற இடத்தில் கங்கா தலா என்ற புனித வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்றது, அங்கிருக்கும் பெரிய குளத்தை, மக்கள் கங்கை நதியாக கருதுகிறார்கள்.
மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில், பக்தர்கள் பாதயாத்திரையாகவே செல்கிறார்கள். இத்தலத்திற்கு செல்லும் முன்னர் நூற்றி எட்டு அடி உயர மங்கள் மஹாடெவா (சிவன்) சிலையை இராண்டாயிரத்து ஏழாம் ஆண்டு நிறுவியிருக்கிறார்கள். இத்தீவின் மிகப் பெரிய சிலையாகும் இது.
அதிபர், துணை அதிபர், பிரதமர் ஆகியோர் இந்திய வம்சாவளியினரே, நாம் பெருமை படக்கூடிய ஒன்று. சத்தோ டெ ரிடுயிட் எனும் அதிபர் மாளிகை மோகா, ரிடுயிட் எனும் இடத்தில், மோரிசியஸ் பல்கலை கழகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. மேன்மை தங்கிய துணை அதிபர் பார்லன் வையாபுரி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது, தமிழர் வம்சாவழி வந்தவர் என மிகப்பெருமையாக கூறிக்கொண்டார். துணை அதிபருடன் கலந்துரையாடும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்தது. முன்னாள் அமைச்சர் கதிரேசன் சிதம்பரம் அவர்களும் எங்களுக்கு மதிய விருந்தளித்து கெளரவப்படுத்தினார்.
மொரிசியஸ் ரூபாய் நோட்டில் தமிழ் வாழ்கிறது, தமிழர்கள் தாய்மொழியை தவற விட்டு விட்டார்களே! அது அவர்கள் குற்றமில்லை, பொருளாதார நிர்ப்பந்தினால் கைவிடவெண்டிய சூழ்நிலை. தமிழன் எங்கிருந்தாலும் தமிழும் வாழவேண்டும்.
படம் 1) புன்னகைக்கும் மங்கள் மஹாடேவா என்ற சிவன் சிலை.
படம் 2) கைலாசநாதர் திருக்கோயில்
Mrs Chandra Selvam, Kuala lampur