உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் மஞ்சள் உடையில் பறை அடித்தபடி இளையர்கள் அவரை அழைத்து வருகிறார்கள். சுற்றி நின்றவர்கள் வணக்கம் தெரிவிக்க அவரும் புன்னகையுடன் வணக்கம் தெரிவித்தபடி அரங்கத்திற்குள் நுழைகிறார். மேடைக்கு எதிரில் அவருக்கு என்றே சிறப்பு நாற்காலி. தன்னுடைய வெண்ணுடை பைஜாமா குர்தாவில் கம்பிரமாய் நிற்கிறார் கவிப்பேரரசு திரு. வைரமுத்து. அவரே எழுதிய அனைத்துலக தமழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அரங்கில் கவிப்பேரரசு அவர்கள் இயற்றிய சர்வதேசத் தமிழ்த்தாய் வாழ்த்தை, ஐவர் அடங்கிய டாக்டர் பாக்யா மூர்த்தி அவர்களின் இசை மாணவியர் பாடினார்கள்.
எழுமின் அமைப்பு, 8 பாயிண்ட் எண்டர்டைன்மெண்ட், 3 டாட் மூவீஸ் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ஆகப் புதிய நூலான ‘மகா கவிதை’ நூல் அறிமுக விழா, சிங்கப்பூரில் மார்ச் 9 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இனிதே தொடங்கியது.
மஞ்சள் உடையில் கவிப்பேரரசு அவர்களை வரவேற்று அழைத்து வந்தவர்கள் AKT க்ரியேஷன் கலைஞர்கள்.நிகழ்ச்சி ஆறு மணிக்கு தொடங்கினாலும் இந்த நிகழ்வில் எல்லாவற்றிலும் ஐந்தே முதன்மையாக நின்றது. காரணம் அறிய தொடர்ந்து வாசியுங்கள். தமிழ் தாய் வாழ்த்து பாடலை தொடர்ந்து, AKT நடனக் குழுவினர் ஐம்பூதங்களை விவரிக்கும் வகையில் நடனமாடி அரங்கினரையும் விருந்தினர்களையும் மகிழ்வித்தனர். குறைத்துக் கொள்ளுங்கள் மீண்டும் ஐந்து.
நிகழ்ச்சியை நெறியாளுகை செய்த மலேசியத் தொலைக் காட்சிப் புகழ், அனைத்துலக இலக்கியச் சொற்பொழிவாளர் வழக்கறிஞர் சி. பாண்டித்துரை அவர்கள் பேசும்போது இடையிடையே பாடல்களை உதவிக்கு அழைத்து கொண்டார்.இது நிகழ்வுக்கு மேலும் சுவை சேர்த்து.
நபீலா நிசார் அவர்கள் ஒருங்கிணைத்த 10 மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், இருவர் அடங்கிய ஐந்து குழுவாக, கவிஞரின் திரையிசைப் பாடல்களில் இருந்து, ஐம்பூதங்களைப் பற்றிய வரிகளைத் தொகுத்து ஒவ்வொவொன்றுக்கும், இருவர் மேடையில் தோன்றி, எழிலாக நடனம் வழங்கியது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
வரவேற்புரையினை எழுமின் அமைப்பின் சிங்கப்பூர் பிரிவு தலைவர் கவிஞர் இறை.மதியழகன் நல்கினார்.
நிகழ்வுக்கு சிங்கப்பூர் மேனாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு இரா.தினகரன் தலைமை வகித்து உரையாற்றினார். அவர் புவி வெப்பம் ஆவது குறித்து பேசினார். நூலுக்கும் அதற்கும் தொடர்ப்பு உள்ளது. ஐந்துக்கு மட்டும் இல்லை இயற்கைக்கும் நூலுக்கும் நிறையவே தொடர்பு உள்ளது.
அறிவியல் கவிதைகள் என்னும் வகையை சார்ந்தது இந்த நூல். இயற்கைதான் அதில் ஆதிக்கம் செலுத்துகிறது. அறிவியல் கவிதைகளுக்கு இருக்கும் பலம் அது புதிய செய்திகளை தருவது. அதற்க்கு என்று ஒரு சுவையும் சுகமும் உள்ளது. மலேசிய இந்திய காங்கிரசின் துணைத்தலைவர் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முன்னிலை வகித்து வழங்கிய உரையில், தனக்கு கவிஞரின் கவிதைகளில் இருக்கும் 40 ஆண்டு வாசிப்பு அனுபவத்தைச் சுவைபட விளக்கினார்.
நூல் அலசல் என்கிற பெரும் பணியை ஏற்றிருந்தார் முனைவர் பேராசிரியர். சரோஜினி செல்லகிருஷ்ணன்அவர்கள். மென்மையாய் தொடங்கிய அவரின் உரை, பெருவெடிப்பு குறித்து சொல்லும்போது இப்படி ஒரு நூல் வரும் என்றால் மீண்டும் ஒரு பெருவெடிப்பு வந்தாலும் தகும் என்ற போது – அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது. ஆழந்த, அகன்ற தெளிவான அலசல். இப்போது புரிந்தது ஏன் ஐந்து முதன்மையாகி இருந்தது என்று. நூல் பஞ்சபூதங்கள் குறித்த அறிவியல் கவிதை நூல்.
கவிப்பேரரசின் ஏற்புரை நூலின் தேவை குறித்தும், அவரின் அனுபவங்கள் குறித்தும் சொல்வதாக இருந்தது. தமிழை அடுத்த தலைமுறைக்கு சிறப்புற எடுத்துச் செல்ல பணியாற்றும் சிங்கை தமிழ் அமைப்புகள், எந்த ஒரு தருணத்தையும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். “மகா கவிதை” நூலை வைரமுத்து அவர்கள் வெளியிட, தேசியப் பல்கலைக் கழகத்தின் தமிழர் பேரவையின் தலைவர் சஞ்சய் முத்துக்குமரன் அவர்களும், சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் இளைஞர் மன்றத்தின் தலைவர் செல்வி அஸ்வினி அவர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்வின் சிறப்புரையாளர்களும், ஆதரவாளர்களும், ஆதரவு தந்த தமிழமைப்புகளின் தலைவர்களும், நூலை முன்பதிவு செய்திருந்தவர்களும் நூலைப் பெற்றுக் கொண்டனர்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் திரையிசைப் பாடல் தொகுப்புக்கு நடனம் வழங்கிய சிறுமிகளுக்கு நினைவுப் பரிசாக, தங்களுக்கு நினைவுப் பரிசாக மகா கவிதை நூல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி இனிதே நிறைவை நாடியது.