எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடன் ஒரு சந்திப்பு:
கடந்த ஞாயிறு மாலை 6 மணி அளவில் வாசகர் வட்டமும்சிங்கப்பூர் தேசிய நூலகமும் இணைந்து வாசிப்புத்திருவிழாவின் ஒரு அங்கமாக எழுத்தாளர் நாஞ்சில் நாடன்சிறப்புரை ஆற்றினார்.
வாசிப்புக் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் பல செய்திகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார். தொல்காப்பியத்தில் தொடங்கிய தமிழ் இலக்கிய வரலாறு இன்று பல புதியவர்கள் எழுத்தால் எவ்வாறு நவீனத்துவம்பெற்றுள்ளது என்பது குறித்து கிட்டத்தட்ட 75 நிமிடங்கள் உரையாற்றினார்.
சங்க இலக்கியங்களில் உள்ள ஒவ்வொருப் பாடலிலும் ஒரு சிறுகதைக்குரிய கரு இருக்கிறது எனக் கூறி பல பாடல்களிலிருந்தது மேற்கோள் காட்டிப் பேசினார்.
வட்டார வழக்குக் குறித்துப் பேசுகையில் பழந்தமிழ்இலக்கியங்களில் பயன்படுத்தி வந்த சொற்கள் வட்டாரவழக்குகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதைக் குறிப்பிட்டார். வட்டார வழக்குகளைப் பயன்படுத்தி சிறுகதைகளும் நாவல்களும் எழுதப்படும் போது அவை எல்லா மக்களுக்கும் புரிவதில்லை என ஒரு வாசகர் கேள்வி கேட்ட போது ஒருகுறிப்பிட்டச் சமுதாயத்தினரும்குறிப்பிட்ட மாவட்டத்துக்கதைகளும் அதிகமாகவெளி வந்து கொண்டிருந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய வட்டாரவழக்குகளும் அவர்கள் மொழியும் அனைவரும் புரிந்து கொண்டனர். அதே போல் நாஞ்சில் நாட்டு வட்டாரமொழியையும் தொடர்ந்து வாசித்தால் புரிந்து கொண்டு விடலாம். ரேழி என்கின்ற சொல் நாஞ்சில் நாட்டில் இல்லை. ஆனால் நாங்கள் அதைப் புரிந்து கொண்டது போல் அங்கணம் என்ற சொல் தஞ்சைப் பகுதிகளில் பயன்படுத்தாத சொல்
இலக்கியங்களில் எழுதப்படும் போது புரிந்து கொள்ளப்படவேண்டும். இப்படித்தான் தமிழ் மொழி பல்வேறு நிலைகளில் வளர வேண்டும். பழமைக்கும் பழமையும் புதுமைக்குப்புதுமையும் கொண்ட மொழி நம் மொழி என்று பல மேற்கோள்களுடன் அருமையான உரையை வழங்கினார்திரு நாஞ்சில் நாடன்.
தொடர்ந்து தேசிய நூலக வாரியத்தின் புத்தக நன்கொடை நிகழ்விற்கு அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிட்டத்தட்ட 60 வாசகர்கள் அமைதியாக புத்தகங்களை வாசித்தனர். அந்த எண்ணிக்கைப் படி நூல்கள் நன்கொடையாக அற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
சித்ரா ரமேஷ்
வாசகர் வட்டம்