சென்னை வாழ் காரைக்குடி நகரத்தார்களின் மேம்பாட்டிறாகாக சென்னையில் “காரைக்குடி நகரத்தார் சங்கம் சென்னை (KNSC)” என்ற பெயரில் 2015ல் தொடங்கப்பட்டது. ஆரம்பகாலம் முதலே அவர்கள் தங்களின் திறமைகளினாலும், சங்கத்தின் லோகோ மூலமாகவும் ஒன்பது நகரக்கோவில் நகரத்தார்களிடையே என்றும் ஒற்றுமையை வலியுறுத்தி நிலைபெறச் செய்து நம் சமூகம் மென்மேலும் தழைக்கப் பாடுபட்டுக் கொண்டுள்ளனர்.
அவர்களின் பெரும் முயற்சியாலும் அயராத உழைப்பினாலும் 29/12/2019 ஞாயிற்றுக்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எம்.எல்.எம் கல்யாண மண்டபத்தில் நம் இனத்தில் வளர்ந்து வரும் சிறு தொழில் மற்றும் கைவினை பொருட்கள் தயார் செய்து வியாபாரம் செய்து வரும் மகளிர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் அறிவுத் திறமைகளை வெளிக்கொணர்ந்து ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு இணைப்பாலத்தை “காரைக்குடி சந்தை” என்ற பெயரில் எந்த வித விளம்பரமுமின்றி ஒரு நாள் திருவிழாவாக மிக நேர்த்தியாக திட்டமிட்டு தலைநகர் சென்னை மற்றும் உலகெங்கும் உள்ள நகரத்தார்கள் அனைவரும் வியக்கும் வகையில் மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளனர்.
இரண்டு வருட கால இடைவெளிக்குப் பிறகு அதை விட இன்னும் சிறப்பாக தொழில் புரியும் மகளிருக்கு உதவி புரிந்து ஊக்கப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல தலைநகரின் மையப்பகுதியில் “காரைக்குடி சந்தையை”
வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் தொடங்கி இரவு 9.00 மணி வரை சென்னை எக்மோரிலுள்ள ராணி மெய்யம்மை ஹாலில் அதே திருவிழாவாக நடத்தத் திட்டமிடப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன.
இந்த முறை காரைக்குடி நகரத்தார் சங்கம் நடத்தவுள்ள “காரைக்குடி சந்தைக்கு” Co-sponsor ஆக செட்டிநாட்டு குழுமமும் Associate Sponsors ஆக காவேரி காபி, லெட்சுமி சிராமிக்ஸ் மற்றும் ரத்னா ரெஸிடென்சியும் இணைந்துள்ளனர். இன்னும் பல நம் நகரத்தார் நிறுவனங்களும் காரைக்குடி சந்தைக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளனர்.
நம் நகரத்தார் மகளிர், தொழில் முனைவோர், வியாபாரம் செய்பவர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னை வந்து இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்தி தங்கள் பொருட்களை மற்றும் திறமைகளை இங்கு சந்தைப்படுத்த தங்களுக்கு வேண்டிய ஸ்டால்களை முன் பதிவு செய்து கொண்டுள்ளனர்.அநேகமாக எல்லா ஸ்டால்களும் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முன் பதிவு செய்து விடப்படும் என்றே கூறுகின்றனர்.
இந்தச் சந்தையில் செட்டிநாட்டு கொட்டன், கூடைகள், செட்டிநாட்டுக் காட்டன் மற்றும் டிசைன் புடவைகள், பித்தளை, எவர்சில்வர், மங்குச் சாமான்கள், கலைநயமிக்க மரச்சாமான்கள், பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள், குழந்தைகளுக்கான வடிவமைக்கப்பட்ட ரெடிமேட் ஆடைகள், பை வகைகள், வெள்ளிச் சாமான்கள், தங்கம், வைர ஆபரணங்கள், செட்டிநாட்டிற்கே உரித்தாகிய மாவு வகைகள், தேங்குழல், மாவுருண்டை, சீடை, அதிரசம் போன்ற பலகாரங்கள் சந்தையில் விற்பனைக்கு வர உள்ளதென அறிகின்றோம். மேலும் இச்சந்தையில் தனிப்பிரிவாக பாரம்பரியம் மிக்க செட்டிநாட்டு உணவு வகைகள் வித விதமாக உடனுக்குடன் சுடச் சுட பார்வையாளர்கள் வாங்கிச் சாப்பிட ஏதுவாக ஸ்டால்களும் ஐஸ்கிரீம்,ஜிகர்தண்டா, சர்பத், பாப்கார்ன் ஸ்டால்களும் இடம் பெறவுள்ளன.
காரைக்குடி நகரத்தார் சங்கம் சென்னை, தொழில்புரியும் மகளிரின் மேம்பாட்டிற்காக நடத்தவுள்ள “காரைக்குடி சந்தை” சீரும் சிறப்போடும் நடைபெற வாழ்த்துகின்றோம்